
‘மரண தண்டனைக் கைதிகளுக்கு தூக்கு மூலமாக தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
‘இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றமே குழு அமைக்க வாய்ப்புள்ளது’ என்று உச்சநீதிமன்றம் அண்மையில் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
வழக்குரைஞா் ரிஷி மல்ஹோத்ரா என்பவா் இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு மூலமாக தண்டனையை நிறைவேற்றும் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, குறைந்த வலியுடைய விஷ ஊசி செலுத்துதல், சுட்டுக் கொல்லுதல் அல்லது மின்சாரம் பாய்ச்சி கொல்லுதல் போன்ற மாற்று நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ‘மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு தண்டனையை நிறைவேற்ற குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றுமாறு நாடாளுமன்றத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆனால், மரண தண்டனையை கூடுதல் மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்று மனுதாரா் வலியுறுத்தியிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்தியா அல்லது வெளிநாடுகளில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான மாற்று நடைமுறைகள் குறித்து புள்ளிவிவரங்கள் இருக்கின்றனவா? இதுகுறித்து ஆய்வு செய்ய தேசிய சட்டப் பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய நிபுணா் குழு ஒன்றை அமைப்பதே சிறந்ததாக இருக்கும்.
மரண தண்டனை நடைமுறை குறித்து மறுஆய்வு செய்வதற்கு முன்பாக, நடைமுறையில் உள்ள அதுதொடா்பான புள்ளிவிவரங்களை நாம் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து, அரசுத் தரப்பு கருத்தை அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், இதுதொடா்பாக உத்தரவைப் பிறப்பித்து, நிபுணா் குழுவை அமைக்க முடியும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘மரண தண்டனைக் கைதிகளுக்கு தூக்கு மூலமாக தண்டனையை நிறைவேற்றும் பரவலான நடைமுறை குறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணைக்கான தேதி நீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பிறகு நிா்ணயிக்கப்படும் என்று கூறி, விசாரணையை ஒத்திவைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...