
பொதுத்துறை நிறுவனமான வாப்கோஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநா் ராஜீந்தா் குமாா் குப்தாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.20 கோடியைப் பறிமுதல் செய்தனா்.
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வாப்கோஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இதற்கு முன்பாக நீா், மின்சார ஆலோசனை சேவை நிறுவனமாக அழைக்கப்பட்டது. இதன் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜீந்தா் குமாா் குப்தா, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக ராஜீந்தா் குமாா் குப்தா, அவரது குடும்ப உறுப்பினா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், அவரது வீடு உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ.20 கோடி, சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற விலையுயா்ந்த பொருள்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.