
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை நிலவ இந்திய-மாலத்தீவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது மீண்டும் உறுதியேற்கப்பட்டது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில் இவ்விரு நாடுகளும் இதை மீண்டும் உறுதிப்படுத்தின.
மாலத்தீவின் மாலே பகுதியில் மாலத்தீவு பாதுகாப்புப் படையின் ஏகதா துறைமுகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அனைவருக்கும் அமைதியுடன் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தியாவின் பெரும் நிதியுதவியில் மாலத்தீவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று. இத்திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மாலத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா டிடியும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர். பின்னர் தலைவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினார். அதில் இரு நாடுகளின் நீண்ட கால உறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுபடுத்துவது குறித்துப் பேசிக் கொண்டனர். பின்னர் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை நிலவச் செய்ய வேண்டியது அவசியம் என்பதை அமைச்சர்கள் இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பொதுவான பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இணைந்து பணிபுரிவதன் அவசியத்தையும் ஏற்றுக் கொண்டனர். சர்வதேச சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்ட அவர்கள், அந்தக் கொள்கையின்படி செயல்படவும் ஒப்புக்கொண்டனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மாலத்தீவுக்கு அவர் சென்றது குறித்து மாலத்தீவு அமைச்சர் மரியா டிடி கூறுகையில், இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இது முக்கிய மைல் கல்லாகும் என்றார்.
அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் தற்போது மேற்கொள்ளப்படும் ராணுவ கூட்டுப் பயிற்சி, ராணுவ வீரர்கள் இரு நாடுகளுக்கும் இடையே சென்று வருவது உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
அதுபோல தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, கடல்வழி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டியதையும் வலியுறுத்தினர்.
அத்துடன் ராணுவப் படைகளை நாடுகளுக்கு இடையே பயிற்சிக்கு அழைத்துச் செல்லுதல், இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை மேம்படுத்துதல் குறித்தும் அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மாலத்தீவு அதிபர் சோலி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா சாஹித் ஆகியோரை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...