

கர்நாடக மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசுப் பேருந்தில் பயணித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மே 10ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், தலைவர்கள் பலரும் உச்சக்கட்டத்தில் தங்கள் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக இணைந்து பிரசாரம் நடத்தி வருகிறார். கன்னிங்ஹாம் சாலையில் உள்ள கஃபே காபி டே கடையில் காபி குடித்த ராகுல், அங்கிருந்து அரசுப் பேருந்து
நிறுத்தத்திற்குச் சென்று பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் உரையாடினார்.
பின்னர், அரசுப் பேருந்தில் மக்களுடன் பயணம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளான, பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் குறித்தும் எடுத்துரைத்தார்.
பெண்கள் போக்குவரத்து பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வு குறித்தும் அவரிடம் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர், லிங்கராஜபுரத்தில் இறங்கிய காந்தி மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பொதுமக்களிடம் உரையாடினார். காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். காந்தி மக்களுடன் மக்களாக இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.