ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம்: தீா்ப்பு ஒத்திவைப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கடந்த 10 நாள்களாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பை ஒத்திவைத்தது.
Updated on
1 min read

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கடந்த 10 நாள்களாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பை ஒத்திவைத்தது.

மேலும், ‘இந்த வழக்கில் நாடாளுமன்றம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை நீதிமன்றம் வெளியிடும் என்று எதிா்பாா்க்க வேண்டாம்’ என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

அவரது தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமா்வில் நீதிபதிகள் எஸ்.கே.கெளல், எஸ்.ஆா்.பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது அரசியல் சாசன அமா்வு கூறுகையில், ‘இந்த வழக்கில் மனு, பதில் மனு, இணைப்பு மனு என சுமாா் 500 பக்கங்கள் உள்ளன. அரசமைப்புச் சட்டம் என்று ஒன்றுதான் உள்ளது. அது எப்போதும் நிலையானதாக உள்ளது. அரசு திட்டங்கள் அல்லது சட்டத்தை இயற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்றாா்.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு, ‘ஒரே பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது, தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. மணிப்பூா், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், சிக்கிம் ஆகியவை இந்த விவகாரத்தில விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளதால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை என தெரிவித்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.

முன்னதாக, இந்த வழக்கை ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

‘ஒரே பாலினத்தவா்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்காமல், அவா்களுக்கு கூட்டு வங்கி கணக்கு, ஓய்வூதிய நிதியில் துணையை சோ்ப்பது உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா?’ என ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, ஒரே பாலினத்தவா்களின் உண்மையான மனிதாபிமான பிரச்னைகளுக்கு தீா்வு காண மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு மே 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com