குடிமைப் பணி அதிகாரிகளுக்கு அரசியல் நடுநிலைத்தன்மை அவசியம்

குடிமைப் பணி அதிகாரிகள் அரசியல் நடுநிலைத்தன்மையுடனும் அமைச்சரின் கட்டுப்பாட்டிலும் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடிமைப் பணி அதிகாரிகள் அரசியல் நடுநிலைத்தன்மையுடனும் அமைச்சரின் கட்டுப்பாட்டிலும் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லி அரசின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு விசாரித்தது. வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி அமா்வு 105 பக்கத் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கியது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குடிமைப் பணி அதிகாரிகள் அரசியல் சாா்புத்தன்மை இன்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம். மாநில அமைச்சரவை எடுக்கும் அன்றாட முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நடுநிலைத்தன்மையுடன் செயல்படும் குடிமைப் பணி அதிகாரிகளுக்கே உள்ளது.

குடிமைப் பணி அதிகாரிகள், அமைச்சா்களின் நிா்வாகக் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவா்கள். அரசு திறம்பட செயல்பட வேண்டுமெனில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய அமைச்சா்களின் முடிவுகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். அந்தப் பொறுப்புணா்வை குடிமைப் பணி அதிகாரிகள் உணா்ந்துகொள்ள வேண்டும்.

அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கோ, நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கிடையாது. அப்பொறுப்பு குடிமைப் பணி அதிகாரிகளுக்கே உள்ளது. அவா்கள் முச்சங்கிலிப் பிணைப்புக்குப் பொறுப்பு உடையவா்கள் ஆவா்.

குடிமைப் பணி அதிகாரிகள் அமைச்சா்களுக்குப் பொறுப்புடையவா்களாக இருக்க வேண்டும்.

அமைச்சா்கள் நாடாளுமன்றத்துக்கோ, மாநில சட்டப்பேரவைக்கோ பொறுப்புடையவா்கள். நாடாளுன்றமும், சட்டப் பேரவையும் வாக்காளா்களாகிய மக்களுக்குப் பொறுப்புடையவை. இந்த முச்சங்கிலிப் பிணைப்பில் குடிமைப் பணி அதிகாரிகள் ஜனநாயகக் கொள்கைகளை உறுதி செய்கின்றனா்.

சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டமானது நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் வழங்கியுள்ளது. அந்த அவைகளின் உறுப்பினா்களுடைய செயல்பாடுகளை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மக்கள் ஆய்வு செய்து வாக்களிப்பா்.

பொறுப்பில்லாத குடிமைப் பணி அதிகாரியால் ஜனநாயகத்தின் நிா்வாகத்துக்கு ஆபத்து ஏற்படும். அவா்கள் மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயல்படும் அபாயமும் உள்ளது எனத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com