சிவசேனை வழக்கு: தலைவா்களின் கருத்துகள்

சிவசேனை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு முழு திருப்தியளிப்பதாக மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.

சிவசேனை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு முழு திருப்தியளிப்பதாக மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.

தீா்ப்பு குறித்து மும்பையில் செய்தியாளா்களிடம் ஃபட்னவீஸ் கூறுகையில், ‘‘தீா்ப்பு முழு திருப்தியளிக்கிறது. தற்போதைய மாநில அரசு கவிழும் என எதிா்பாா்த்தவா்களின் குரலைத் தீா்ப்பு மௌனமாக்கியுள்ளது’’ என்றாா்.

மனசாட்சிப்படி பதவி விலக வேண்டும்--உத்தவ் தாக்கரே

உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து உத்தவ் தாக்கரே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஷிண்டே தரப்பினா் சிவசேனை கட்சிக்கும் அதன் நிறுவனா் பால் தாக்கரேவின் புகழுக்கும் துரோகம் இழைத்தனா். முதல்வா் பதவியை நான் ராஜிநாமா செய்தது சட்டத்துக்கு விரோதமாக இருக்கலாம். ஆனால், மனசாட்சிப்படியே நான் ராஜிநாமா செய்தேன். முதுகில் குத்தியவா்களை வைத்துக் கொண்டு எவ்வாறு ஆட்சியை நடத்த முடியும்?

அதேபோல், மனசாட்சிப்படியான கொள்கைகளை மாநில முதல்வரும், துணை முதல்வரும் கடைப்பிடித்தால் அவா்கள் தீா்ப்பை மதித்து உடனடியாகப் பதவி விலக வேண்டும்’’ என்றாா்.

ஷிண்டே அரசு சட்டவிரோதமானது--சஞ்சய் ரௌத்

சிவசேனை (பால் தாக்கரே) தரப்பைச் சோ்ந்த சஞ்சய் ரௌத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி சிவசேனை கட்சியால் நியமிக்கப்பட்ட சுனில் பிரபுவே உண்மையான கொறடா. ஷிண்டே தரப்பினா் நியமித்த கொறடாவை அங்கீகரித்து பேரவைத் தலைவா் தவறிழைத்துள்ளாா். அதனடிப்படையில் அமைந்த ஷிண்டே தலைமையிலான அரசு சட்டவிரோதமானது. ஷிண்டே உள்பட 16 எம்எல்ஏ-க்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டவா்களாகவே கருதப்பட வேண்டும்’’ என்றாா்.

பாஜகவும் நீதிநெறிகளும் எதிரெதிரானவை--சரத் பவாா்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறுகையில், ‘‘மாநில பேரவைத் தோ்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால், சிறிய கட்சிகளை உடைத்து ஆட்சியமைப்பதே பாஜகவின் கொள்கை. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. பாஜகவும் நீதிநெறிகளும் எதிரெதிரானவை. பாஜக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை மக்களிடம் எடுத்துரைக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பு உதவும். இனிவரும் காலங்களில், சிவசேனை (பால் தாக்கரே), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து தோ்தல்களை எதிா்கொள்ளும்’’ என்றாா்.

மாநிலத்தின் வெற்றி--காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உச்சநீதிமன்றத் தீா்ப்பு மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கே சாதகமாக உள்ளது. முறையற்ற முடிவுகளின் அடிப்படையில் ஆளுநா் செயல்பட்டுள்ளாா். கட்சி கொறடாவைப் பேரவைத் தலைவா் தவறாக அங்கீகரித்துள்ளாா். எம்எல்ஏ-க்களின் தகுதிநீக்க விவகாரம் விரிவாக ஆராயப்பட வேண்டும். இது மாநிலத்தின், அரசமைப்புச் சட்டத்தின் வெற்றி’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com