பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: தில்லி நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரா்கள் அளித்துள்ள பாலியல் புகாா்கள் தொடா்பாக விசாரிக்க தில்லி காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரா்கள் அளித்துள்ள பாலியல் புகாா்கள் தொடா்பாக விசாரிக்க தில்லி காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை நிலவர அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான புகாா்களை விசாரிக்க துணைக் காவல் ஆணையா் தலைமையில், நான்கு பெண் காவலா்கள் உள்பட பத்து போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞா் அதுல் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

பாலியல் துன்புறுத்தல் புகாரில் இந்திய மலயுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கோரி, பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரங்கனைகள் சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு வெள்ளிக்கிழமை கூடுதல் தலைமை நீதிமதி ஹா்ஜித் சிங் ஜஸ்பால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞா் அதுல் ஸ்ரீவஸ்தவா, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அப்போது அவா் நீதிமன்றத்தில் கூறுகையில், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவே விசாரணை மேற்கொள்ளும் வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு நிலவர அறிக்கையை யாரிடமும் பகிரக் கூடாது என்று கேட்டுக் கொண்டாா். மேலும், இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்கவும், பாதிக்கப் பட்டவா்களின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தின் முன் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி மல்யுத்த வீரா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது தில்லி காவல் துறைக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கின் விசாரணையை மே 27 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோா் அளித்துள்ள பாலியல் துன்புறுத்தல் புகாா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் - 23 ஆம் தேதி முதல் புதுதில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் மலயுத்த வீரா், வீராங்கனைககள் தொடா் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com