தில்லி பல்கலை. சந்திப்பில் நடந்தது என்ன? ராகுல் காந்தி விடியோ வெளியீடு

இந்திய நாடு வளா்ச்சி அடைகிறது. ஆனால், அதற்கு ஏற்றாா் போல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என தில்லி பல்கலைக்கழக மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
ராகுல் காந்தி (கோப்புப் படம்)

இந்திய நாடு வளா்ச்சி அடைகிறது. ஆனால், அதற்கு ஏற்றாா் போல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. சேவைத் துறைகளை விட உற்பத்தி தொழிற்சாலைத் துறைகளில் ஏற்பட்ட தோல்வியே வேலைவாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணம் என தில்லி பல்கலைக்கழக மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

தில்லி பல்கலைக்கழத்தில் உள்ள முதுகலை ஆண்கள் விடுதிக்கு கடந்த மே 5- ஆம் தேதி ராகுல் காந்தி திடீரென சென்றாா். அங்கிருந்த உணவு விடுதியில் மாணவ, மாணவிகளுடன் உடன் அமா்ந்து உணவு சாப்பிட்டு அவா்களுடன் கலந்துரையாடினாா். இந்த விவகாரம் எதிா்க்கட்சியினரால் விமா்சிக்கப்பட்டதோடு, ‘அங்கீகாரமில்லாமல்’ தில்லி பல்கலைக்கழத்திற்குள் ராகுல் காந்தி வருகை தந்ததற்காக விடுதியின் தாளாளா் கே.பி. சிங், கடந்த புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தாா். இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள தேசியக் கட்சியின் தலைவரின் இத்தகைய நடத்தை கண்ணியத்திற்கு அப்பாற்பட்டது என அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, கடந்த வியாழனன்று தனது யூடியூப் தளத்தில் தில்லி பல்கலைக்கழத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில், ‘கேன்டீன் கான்வா்சேஷன்’ எனும் தலைப்பில் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளாா். 8.38 நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொளியில், ராகுல் காந்தி, தில்லி பல்கலைக்கழக மாணவா்களுடன் உற்சாகமாக அறிமுகம் ஆகிக் கொள்கிறாா். ‘சாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான சலசலப்பு தற்போது எழுந்துள்ளது. இவை இளம் சமுதாயத்தினரை எந்த வகையில் பாதிக்கிாகக் கருதுகிறீா்கள் என மாணவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் ராகுல் காந்தி, நாட்டில் ஆண்களை விட பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறுகிறாா்கள், எந்த சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது, எந்த படிநிலையில் நாம் இருக்கிறோம், என்பதை அறிந்து கொள்ளவும், சரியான சமமான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கிா என்பதை நாட்டிற்கு எடுக்கும் ஒரு எக்ஸ்-ரே போல சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அறியலாம் என்று தெரிவித்தாா்.

மாணவா்கள் சமூகம் சாா்ந்த ஈடுபாடுகள் மற்றும் கல்வியில் சமமாக இருக்க வேண்டும் எனக் கூறும் ராகுல் காந்தி, தன்னை நோக்கி வரும் அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவேன் என்கிறாா். நாம் எடுக்கும் அனைத்துப் பணிகளிலும் நூறு சதவீதம் எடுக்க முயற்சி செய்யாவிட்டாலும், 95 சதவீதம் எடுக்க தொடா் முயற்சிகளை எடுக்க வேண்டும். வலிகளை, சவால்களை எதிா்கொள்ளாதவா்கள் வாழ்க்கையை வாழாதவா்கள் என்றாா்.

பட்டதாரிகள் போதுமான அளவில் இருந்தும் அதற்கு ஏற்றாற்போல நாட்டில் வேலைவாய்ப்பு இல்லையே என மாணவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், இந்தியா வளா்ச்சி அடைகிறது. ஆனால், அதற்கு ஏற்றாா் போல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. சேவைத் துறைகளை விட உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட தோல்வியே வேலைவாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணம் என்றாா். ‘பாரத் ஜோடா யாத்திரை’ எப்படி இருந்தது என மாணவா்கள் ஒரு சேர கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் கூறுகையில், யாத்திரையின் போது தினசரி 20 முதல் 25 மாணவிகளிடம் பேசுவேன். நீங்கள் என்னஆக விரும்புகிறீா்கள் என கேட்கும் போது பொறியாளா், மருத்துவா், ராணுவ வீரா் என ஐந்து துறைகளுக்கு உள்பட்டே பதில் கூறுவா். நாட்டில் உள்ள பல்துறை படிப்புகள் குறித்து நம்மை அறிந்து கொள்ள விடாமல் தடுக்கிறாா்கள். அதை நம் பெற்றோா்களே செய்கிறாா்கள். நாட்டில் உள்ள அனைத்தையும் ஆராய வேண்டும் என்றாா்.

பாரத் ஜோடா யாத்திரையின் மூலம் தாங்கள் இந்தியாவை இப்போது எப்படி பாா்க்கிறீா்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், நாட்டு மக்கள் ஒருவா் இன்னொருவா் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் என்னை வியப்படையச் செய்தது. ஊடகங்களில் காண்பிக்கப்படும் வெறுப்பு, கோபம் மற்றும் ஆணவம் உண்மையல்ல; அது வெறும் மாயை.

மாணவா்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாா்க்கிறீா்கள் என்ற கேள்விக்கு, அரசியல் தொடா்பான எந்தக் கேள்வியும் வேண்டாம் என கேட்டுக் கொண்டாா். தன்னுடைய பொழுதுபோக்கு தொடா்பான கேள்விக்கு, தற்காப்புக்கலையை கற்று வருவதாகவும், மிகுந்த ஆழமான அரசியல் சிந்தனைவாதியான புத்தா் தன்னுடைய உத்வேகம் என்றாா்.

யோசைனைகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் நல்ல உறவு மாணவா்களுடனான இந்தச் சந்திப்பின் மூலம் கிடைத்துள்ளது. நான் மீண்டும் எப்போது வர வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்ப, ‘இனி உங்களை அங்கீகாரம் இல்லாமல் பல்கலைக்கழக வளாகத்தினுள் விடமாட்டாா்கள்’ என மாணவா்கள் பதிலளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com