
தமிழிசை (கோப்புப் படம்.)
ஜிப்மர் மருத்துவமனை கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் போராட்டம் காரணம் அல்ல என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜிப்மர் மருத்துவமனை கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் போராட்டம் காரணம் அல்ல என்றும், ஆனால் ஒரு சிலர் தனக்கு தான் வெற்றி வெற்றி என்கிறார்கள் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 56-வது கம்பன் விழா கம்பன் திரையரங்கில் இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கம்பன் கழக தலைவர் செல்வகணபதி எம்.பி., செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
56-வது கம்பன் விழாவை துவக்கி வைத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை முற்றிலுமாக இலவசமாக தான் வழங்கப்படுகிறது. ஒரு சில சிகிச்சைகளுக்கு மட்டும் வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதனை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 64 வகையான பரிசோதனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய தமிழிசை, ஏழை எளிய மக்களின் நலன் கருதி ஜிப்மரில் இலவச மருத்துவம் தொடர வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியாவை தொடர்ந்து வலியுறுத்தியத்தின் பேரில் தற்போது கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால் ஒரு சில எதிர்க்கட்சிகள் தங்களுக்கு தான் வெற்றி வெற்றி என்று கூறி வருகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், மேலும் ஒரு சில நாளேடுகளில் திடீரென்று கட்டணம் குறைப்பு என்று எழுதுகிறார்கள் இது திடீரென்று எல்லாம் கிடையாது. மத்திய அரசை வலியுறுத்தியதன் பெயரில் இது நடைபெற்றது என்று தெரிவித்தார்.
மேலும் யூனியன் பிரதேச அரசியலில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கேட்ட பொழுது, ஆளுநர்களுக்கு தான் அதிகாரம் என்று நாங்கள் யாரும் சொல்வது கிடையாது. அதுவும் குறிப்பாக நான் சொல்வது கிடையாது. அவர் அவர்களுக்கு என்ன அதிகாரமோ அதை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.