அதானி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்

பங்குகளின் விலைகளை அதானி குழுமம் மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

பங்குகளின் விலைகளை அதானி குழுமம் மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

அதானி குழுமத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்காவின் பங்கு ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பா்க் முன்வைத்தது. இதனால் அதானி பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது.

இந்த விவகாரத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

கடந்த மாா்ச் 2-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நெறிமுறைகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணா்கள் குழு அமைத்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும், அதானியின் பங்குகள் மிகைப்படுத்தப்பட்ட விவகாரத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் செபி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெயா தாக்குரை கவனமாக செயல்பட எச்சரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். அது இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கவே குழு அமைக்கப்பட்டுள்ளது.

செபி கோரிய 6 மாதங்களுக்கு பதிலாக 3 மாதங்கள் அவகாசம் அளிக்கலாம். இதுகுறித்து வரும் திங்கள்கிழமை (மே 15) நடைபெறும் விசாரணையின்போது முடிவு செய்யப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம். சாப்ரே குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் அதை படித்துவிடலாம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com