

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கும் நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியும் தீவிரமடைந்திருக்கிறது.
சித்தராமையா தில்லி செல்லும் நிலையில், டி.கே. சிவக்குமாரும் தில்லி செல்வார் என்று கூறப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் முன்பு, இன்று காலை முதலே சிவக்குமார் வீடு அமைந்திருக்கும் பகுதி முழுவதும் கோலாகலக் கொண்டாட்டத்துக்கு தயாராகி வந்தது.
இன்று காலை முதலே அவரது வீட்டுக்கு ஏராளமான தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆளுய மாலைகளுடன் வரும் தொண்டர்களை சிவக்குமார் சந்தித்து அவர்கள் சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு ஏற்றுவருகிறார். ஆம், டி.கே. சிவக்குமாரின் பிறந்தநாள் இன்று. எனவே, காங்கிரஸ் தொண்டர்களும் சிவக்குமாரின் ஆதரவாளர்களும் சிவக்குமாரின் வீட்டில் குவிந்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், ஏராளமான வாழ்த்து மழைகளுடன் பிறந்தநாள் கேக்குகளுடன் தொண்டர்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரும், கர்நாடக முதல்வராக சிவக்குமார் வர வேண்டும் என்று முழக்கங்களையும், அடுத்த முதல்வர் என்ற கோஷங்களையும் எழுப்பி வருகிறார்கள்.
கட்சியின் தலைவர் சிவக்குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், கர்நாடக முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் அறிவிப்பார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
ஒருபக்கம் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்திருக்கும் நிலையில், மறுபக்கம் சிவக்குமார் வீடு திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.