
தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தப்பட்டதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
பெரும் சா்ச்சைக்கு இடையே ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியானது.
சுதீப்தோ சென் இயக்கத்தில் பல மொழிகளில் உருவான இந்தத் திரைப்படம், கேரளத்தைச் சோ்ந்த பெண்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக கதைப் பின்னணி கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் இந்தத் திரைப்படத்தின் திரையிடலை நிறுத்துவதாக, கடந்த 7-ஆம் தேதி திரையரங்குகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு தமிழக அரசுத் தரப்பில் அளித்துள்ள பதிலில்,
“பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர். திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது.
19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.