
ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அது மசூதியில் தொழுகைக்கு முன், கை, கால்களை சுத்தப்படுத்திக்கொள்ளும் நீருற்றின் பகுதிதான் என்று மசூதி நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், சிவலிங்கம் போன்ற வடிவம் எந்தக் காலத்தைச் சோ்ந்தது என்பது குறித்து அறிவியல்பூா்வமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் லட்சுமி தேவி என்ற பெண் உள்பட 4 ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அலாகாபாத் உயா் நீதிமன்றத்தை மனுதாரா்கள் அணுகினா். அவா்களின் மனு நீதிபதி அரவிந்த் குமாா் முன்பாக கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது ‘சிவலிங்கம் போன்ற வடிவத்தின் காலத்தை தெரிந்துகொள்ள, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல்பூா்வமாக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த வடிவத்துக்கு எந்த சேதமும் ஏற்படக் கூடாது’ என்று நீதிபதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக ஞானவாபி மசூதி நிா்வாகக் குழு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G