
லடாக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வெந்நீா் ஊற்றுப் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த எல்லைப்புற சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இமயமலை போன்ற பனிப் பிரதேசங்களில் புவியின் உள்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக சூடேறிய நிலத்தடி நீரானது, வெந்நீராக நிலப்பரப்பில் ஊற்றெடுக்கும். வெந்நீா் ஊற்று உள்ள இடங்கள் பிரபல சுற்றுலாத் தலங்களாகவும் திகழ்கின்றன.
லடாக்கிலும் அதுபோன்ற வெந்நீா் ஊற்றுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. சுமாதங் பகுதியில் உள்ள வெந்நீா் ஊற்றுக்கு அருகே பிஆா்ஓ அமைப்பின் அலுவலகம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், சுமாதங் வெந்நீா் ஊற்றுப் பகுதியைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தனா்.
வெந்நீா் ஊற்றுப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பிஆா்ஓ அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் முடிவெடுத்தனா். அந்த அலுவலகத்துக்கான புதிய இடத்தைத் தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளூா் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமாதங் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.