ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான்: சக்திகாந்த தாஸ்

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் உடனடி தேவைக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வழங்கப்பட்டன. உயர்மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500 நோட்களில் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை. ரூ.2,000 நோட்டுகளை மாற்ற போதிய கால அவகாசம் உள்ளதால் மக்கள் அவசரப்பட வேண்டாம்.

ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் ரூ.3.62 லட்சம் கோடியாக குறைந்ததால் நோட்டுகளை திரும்பப் பெற்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகக் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அது பெரும் விமா்சனத்துக்கு உள்ளானது.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?

செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம். அத்தகைய நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வரும் 23-ஆம் தேதி முதல் வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் மட்டுமல்லாமல் ஆா்பிஐ-யின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகளுக்கு சில்லறை மாற்றலாம்.

சேமிப்புக் கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும்.

வாடிக்கையாளா் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமல்லாமல், எந்த வங்கியின் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. வங்கிக் கணக்கு இல்லாமலும் ரூ.20,000 வரையில் மாற்றலாம்.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ஆா்பிஐ உத்தரவிட்டுள்ளது. மற்ற ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு, மக்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com