சந்திரயான்-3 விண்கலம்: விரைவில் விண்ணில் ஏவத் திட்டம்

நிலவை ஆய்வு செய்யும் "சந்திரயான்-3' விண்கலத்தை "ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்' மூலம் ஜூலை மாதம்  விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சந்திரயான்-3 விண்கலம்: விரைவில் விண்ணில் ஏவத் திட்டம்

நிலவை ஆய்வு செய்யும் "சந்திரயான்-3' விண்கலத்தை "ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்' மூலம் ஜூலை மாதம்  விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008-ஆம் ஆண்டு சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றிவந்து ஆய்வு செய்தது. அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன. 
"சந்திராயன்-1' வெற்றி பெற்றதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக நவீன நுட்பத்தில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது. அந்த விண்கலம் "ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்' மூலம் 22.6.2019-இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
பல்வேறு கட்ட  பயணங்களுக்கு பிறகு "சந்திரயான்-2'  அந்த ஆண்டு செப்டம்பரில் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் செயலிழந்தது. 
அதேநேரத்தில், விண்கலத்தின் மற்றொரு பகுதியான "ஆர்பிட்டர்', நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தற்போது அந்த "ஆர்பிட்டர்' நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்து வருகிறது.  
இந்த நிலையில், "சந்திரயான்-3' திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த  2020-ஆம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. 
ஏற்கெனவே "ஆர்பிட்டர்' நிலவைச் சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர் மற்றும் ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டது. 
கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான ஆய்வுப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகு "சந்திரயான்-3' விண்கலம் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: "சந்திரயான்-3' திட்டத்துக்காக மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் லேண்டர், ரோவர் கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
"சந்திரயான்-3' விண்கலத்தை "ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்' மூலம் ஜூலை 2-ஆவது வார இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாக லேண்டர் கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம், "என்விஎஸ்-2' எனப்படும் நேவிகேஷன் (வழிகாட்டுதல்) செயற்கைக்கோளினை "ஜிஎஸ்எல்வி மார்க்-3' ராக்கெட் மூலம் மே 29-ஆம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com