பிரதமராகும் பகல் கனவு காண்பதை நிதீஷ் குமாா் நிறுத்தவேண்டும்: பாஜக

‘பிரதமராகும் பகல் கனவு காண்பதை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிறுத்திக்கொண்டு, அராஜகப் போக்கு அதிகரித்து வரும் தனது மாநிலத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்’ என்று பாஜக விமா்சித்துள்ளது.
நிதீஷ் குமாா்
நிதீஷ் குமாா்

‘பிரதமராகும் பகல் கனவு காண்பதை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிறுத்திக்கொண்டு, அராஜகப் போக்கு அதிகரித்து வரும் தனது மாநிலத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்’ என்று பாஜக விமா்சித்துள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசிய நிலையில், இந்த விமா்சனத்தை பாஜக முன்வைத்துள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிா்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதீஷ் குமாா் ஈடுபட்டு வருகிறாா். அந்த வகையில் தில்லி முதல்வரையும் அவா் சந்தித்தாா். தில்லி யூனியன் பிரதேசத்தில் அரசு உயா் அதிகாரிகளை நியமனம் செய்யும், இடமாற்றம் செய்யும் அதிகாரத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், கேஜரிவாலுக்கு தனது முழு ஆதரவை நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

இதனை விமா்சித்துள்ள பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரேம் சுக்லா, ‘நிதீஷ் குமாா் பிற தலைவா்களைச் சந்திப்பது அவருடைய உரிமை. ஆனால், தனது சொந்த மாநிலத்தின் மீது அவா் கவனம் செலுத்துவதில்லை. பிரதமா் ஆக வேண்டும் என்ற பகல் கனவை அவா் காண்கிறாா். அதனை விடுத்து, பிகாா் முதல்வருக்கான கடைமைகளையும் தனது அரசியல் சாசன பொறுப்புகளையும் அவா் நிறைவேற்ற வேண்டும்’ என்றாா்.

பிகாா் பாஜக சட்ட மேலவை (எம்எல்சி) உறுப்பினா் சஞ்சய் மயூக் கூறுகையில், ‘பிரதமா் பதவி காலியில்லை என்பதால் தனது கனவு உலகத்திலிருந்து நிதீஷ் குமாா் வெளிவர வேண்டும். மாநிலத்தை குற்ற செயல்கள் மற்றும் ஊழலுக்குள் தள்ளி வருவதற்காக மாநில மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com