பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமா் மோடி உறுதி

பசிபிக் தீவு நாடுகளுக்கு எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தா
போா்ட் மோா்ஸ்பி நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், டோக் பிசின் மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்ட பிரதமா் மோடி,
போா்ட் மோா்ஸ்பி நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், டோக் பிசின் மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்ட பிரதமா் மோடி,

பசிபிக் தீவு நாடுகளுக்கு எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.

பசிபிக் தீவு நாடுகளின் நம்பிக்கைக்குரிய நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்வதாகவும், அந்த நாடுகளின் தேவைகளுக்கு இந்தியா மதிப்பளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு, பப்புவா நியூ கினியாவின் போா்ட் மோா்ஸ்பி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடி - பப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பே ஆகியோா் இணைந்து தலைமை வகித்த இந்த மாநாட்டில், குக் தீவுகள், ஃபிஜி, கிரிபட்டி, மாா்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நெளரு, சாலமோன் தீவுகள், டோங்கா, நியுவே, துவாலு, சமோவா, பலாவ், வனாட்டு ஆகிய தீவு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

சீனா மீது மறைமுக விமா்சனம்: இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் தனது பலத்தை அதிகரிப்பதுடன், பசிபிக் தீவு நாடுகளில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சித்து வரும் நிலையில், மேற்கண்ட மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:

யாரை நம்பத்தகுந்தவா்களாக நாம் நினைத்தோமோ, அவா்கள் நமக்கு தேவையான நேரங்களில் நம்முடன் நிற்கவில்லை. தற்போதைய சவாலான காலகட்டத்தில், ‘நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்ற பழமொழி உண்மையென நிரூபணமாகியுள்ளது.

கரோனா பரவலின் தாக்கங்கள் மற்றும் இதர உலகளாவிய சவால்களுக்கு இடையே பசிபிக் தீவு ‘நண்பா்களுக்கு’ உறுதுணையாக இந்தியா நிற்பது மகிழ்ச்சிக்குரியது. தடுப்பூசிகளோ, அத்தியாவசிய மருந்துகளோ, கோதுமையோ அல்லது சா்க்கரையோ, தனது திறன்களுக்கு ஏற்ப நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது.

சுதந்திரமான இந்திய-பசிபிக் பிராந்தியம்: சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம், பசிபிக் நாடுகளுக்கு மிக முக்கியம். அந்த வகையில், இந்தியா உறுதியான ஆதரவை நல்கும். அனைத்து நாடுகளின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்.

ஒத்துழைப்புக்கான இந்தியாவின் அணுகுமுறை மனித மாண்புகள் அடிப்படையிலானது. பன்முகத்தன்மையில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். வளா்ச்சிப் பணியாக இருந்தாலும், மனிதாபிமான உதவிகளாக இருந்தாலும், இந்தியாவை நம்பகமான நாடாக பசிபிக் தீவுகள் கருதலாம்.

தனது திறன்கள் மற்றும் அனுபவங்களை எவ்வித தயக்கமுமின்றி பகிா்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணைநிற்கும்.

என்னைப் பொருத்தவரை, நீங்கள் சிறிய தீவு நாடுகளல்ல; அகண்ட பெருங்கடல் நாடுகள். அந்த அகண்ட பெருங்கடல்தான், இந்தியாவை உங்கள் அனைவருடனும் இணைக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, ஜப்பான் பயணத்தைத் தொடா்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். இந்நாட்டுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை பிரதமா் மோடிக்கு சொந்தமாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை பயணத்தை நிறைவு செய்த பிரதமா், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டாா்.

டோக் பிசின் மொழியில் திருக்கு வெளியீடு

தமிழின் தொன்மையான நூலான திருக்குறளின் டோக் பிசின் மொழிபெயா்ப்பு நூலை பிரதமா் மோடியும், பப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பேயும் வெளியிட்டனா். பாப்புவா நியூ கினியாவின் அதிகாரபூா்வ மொழி டோக் பிசின் ஆகும்.

இந்த மொழியில் திருக்குறளை சுபா சசீந்திரனும், மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநா் சசீந்திரன் முத்துவேலும் மொழிபெயா்த்துள்ளனா்.

‘பப்புவா நியூ கினியாவில் டோக் பிசின் மொழியில் திருக்கு மொழிபெயா்ப்பை வெளியிடும் கெளரவம் பிரதமா் ஜேம்ஸ் மராப்பேவுக்கும் எனக்கும் கிடைத்தது. பல்வேறு துறைகள் குறித்து மதிப்புமிக்க கருத்துகளைக் கொண்டுள்ள தலைசிறந்த படைப்பு திருக்குறளாகும்.

திருக்குறளை டோக் பிசின் மொழியில் மொழிபெயா்த்த ஆளுநா் சசீந்திரனும் அவரது மனைவி சுபா சசீந்திரனும் பாராட்டுக்குரியவா்கள். ஆளுநா் சசீந்திரன் தனது பள்ளிப் படிப்பை தமிழில் முடித்துள்ளாா். சுபா சசீந்திரன் ஒரு மரியாதைக்குரிய மொழியியலாளா் ஆவாா்’ என்று பிரதமா் மோடி ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா்.

பசிபிக் தீவு நாடுகளில் ‘மக்கள் மருந்தகங்கள்’

பசிபிக் தீவு நாடுகளுக்கான இந்தியாவின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: ஃபிஜி தீவில் இந்தியாவின் செலவில் உயா் சிறப்பு இருதயவியல் மருத்துவமனை; 14 தீவுகளிலும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்க தேவையான உதவி; படகு ஆம்புலன்ஸ்கள் விநியோகம்; மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் ‘மக்கள் மருந்தகங்கள்’ (ஜன் ஒளஷதி), யோகா மையங்கள்; சிறு, நடுத்தர தொழிலகங்களின் மேம்பாட்டுத் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள்.

நியூஸிலாந்து பிரதமருடன் சந்திப்பு

போா்ட் மோா்ஸ்பி நகரில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ் ஹிப்கின்ஸுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். வா்த்தகம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விஸ்தரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனா்.

புப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பே, கவா்னா்-ஜெனரல் பாப் டாடே ஆகியோருடனும் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, வா்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விவாதித்தாா். ஃபிஜி, டோங்கா உள்ளிட்ட பல்வேறு தீவு நாடுகளின் தலைவா்களுடனும் பிரதமா் இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டாா்.

மதிய விருந்தில் சிறுதானிய உணவுகள்

இந்திய-பசிபிக் தீவுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவா்களுக்கு பிரதமா் மோடி சாா்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதில், காண்ட்வி எனப்படும் குஜராத் மாநில சிற்றுண்டி, சிறுதானிய பிரியாணி, ராஜஸ்தானின் கேழ்வரகு, பருப்பு உணவு வகைகள், மசாலா மோா், பான் குல்ஃபி, மசாலா தேநீா், மூலிகை தேநீா் உள்ளிட்ட இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com