
பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் டூவீலர் ஸ்டார்ட் அப் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை ரூ.1.45 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
750 வாட் சார்ஜர் கொண்ட இந்த மாடல் ரூ.1.58 லட்சம் விலையில் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் ;தனது அறிமுக விழாவில் அறிவித்தது. நிறுவனம் கூற்றுப்படி வரவிருக்கும் நாட்களில் பெங்களூரிலிருந்து ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கும். அதே வேளையில் அடுத்த 12 மாதங்களில் 40 முதல் 50 நகரங்களில் 160 முதல் 180 சில்லறை கடைகளின் நெட்வொர்க் மூலம் தனது வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்தும்.
போட்டி நிறைந்த இந்திய ஆட்டோமொபைல் வர்த்தகத்தில் எங்கள் பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதே வேளையில் தொழில்துறையிலிருந்து நாங்கள் சேகரிக்கும் நுண்ணறிவுகள் மூலம், நம்மை உருவாக்குவதில் தொடர்ந்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என்றார் சிம்பிள் எனர்ஜி நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார்.
இது நாள் வரையிலும் பொறுமையாக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான டெலிவரிகளை எளிதாக்குவதே நிறுவனத்தின் மிகப்பெரிய முன்னுரிமையாக இருக்கும்.
சிம்பிள் ஒன் இப்போது நிலையான மற்றும் அகற்றக்கூடிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம் சுமார் 212 கி.மீ வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடலானது தற்போது சந்தையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் இரு சக்கர வாகனமாகும். இது தவிர, இந்தூர் ஐஐடியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட வெப்ப மேலாண்மை அமைப்புடன் வரும் முதல் இ-ஸ்கூட்டரும் இதுவே.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...