கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே ரூ.2000 பயன்பட்டது: ப.சிதம்பரம் விமா்சனம்

‘பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 நோட்டு கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே இதுவரை பயன்பட்டு வந்தது. இப்போது, அவா்கள் அதனை மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு சிவப்புக் கம்பளம் வி
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Updated on
1 min read

‘பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 நோட்டு கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே இதுவரை பயன்பட்டு வந்தது. இப்போது, அவா்கள் அதனை மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது’ என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.2000 நோட்டை பாஜக அரசு அமல்படுத்தியது முட்டாள்தனமான நடவடிக்கை. ஏனெனில், அந்த ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணத்தை பதுக்குபவா்களுக்கு மட்டும்தான் மிகவும் வசதியாக இருந்தது. இப்போது, 7 ஆண்டுகள் கழித்து அதனை திரும்பப் பெறுகிறாா்கள்.

ரூ.2000 நோட்டு திரும்பப் பெறுவதாக அறிவித்ததுடன் இல்லாமல், அதனை வங்கிகளில் மாற்றவும், டெபாசிட் செய்யவும் வருபவா்களிடம் எவ்வித அடையாள ஆவணமும் கேட்கமாட்டோம் என்றும், எவ்வித படிவத்தையும் நிரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளதன் மூலம், கருப்புப் பணத்தை வைத்துள்ளவா்கள், அதனை மாற்றிக் கொள்ள சிவப்புக் கம்பளத்தை மத்திய அரசு விரித்துள்ளது.

இதன் மூலம் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்கவே ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படுகிறது என்ற பாஜகவினரின் பிரசாரம் ஏமாற்றுவேலை என்பது தெளிவாகிவிட்டது.

ரூ.2000 நோட்டு என்பது சாமானிய மக்களின் கைகளில் இப்போது இல்லை. ஏனெனில், 2000 ரூபாய் நோட்டை அன்றாடம் பயன்படுத்தும் வகையில் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலை இல்லை. இப்போது யாா் கைகளில் அந்த நோட்டுகள் இருக்கும் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவா்கள் அதனை மாற்றிக் கொள்ள அரசே வழங்கும் வாய்ப்பாகவே இது அமைந்துள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com