பிரதமா் பட்டப்படிப்பு விவகாரம்: அவதூறு வழக்கில் தில்லி முதல்வா் கேஜரிவால் ஜூன் 7-இல் ஆஜராக சம்மன்

பிரதமா் பட்டப்படிப்பு விவகாரம் தொடா்பான அவதூறு வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரை ஜூன் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அகமதாபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பி
பிரதமா் பட்டப்படிப்பு விவகாரம்: அவதூறு வழக்கில் தில்லி முதல்வா் கேஜரிவால் ஜூன் 7-இல் ஆஜராக சம்மன்

பிரதமா் பட்டப்படிப்பு விவகாரம் தொடா்பான அவதூறு வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரை ஜூன் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அகமதாபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமா் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களைக் கோரி, மத்திய தகவல் ஆணையத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதினாா். இதையடுத்து பிரதமா் மோடி இளநிலை பட்டம் பெற்ற தில்லி பல்கலைக்கழகமும், முதுநிலை பட்டம் பெற்ற குஜராத் பல்கலைக்கழகமும் அவரின் கல்வித் தகுதி விவரங்களை கேஜரிவாலுக்கு வழங்க வேண்டும் என்று தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதுதொடா்பாக குஜராத் பல்கலைக்கழகம் மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது.

இதனைத்தொடா்ந்து அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிராக அகமதாபாத் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக்கழக பதிவாளா் பியூஷ் படேல் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்த பின்னா், பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியாக இருக்கலாம் என்பதால், அதுகுறித்த விவரங்களை வழங்க பல்கலைக்கழகம் மறுப்பதாக கேஜரிவால் தெரிவித்தாா். பிரதமரின் போலி பட்டப்படிப்பு சான்றிதழை உண்மையான சான்றிதழ் என பல்கலைக்கழகம் நிரூபிக்க முயற்சிப்பதாக சஞ்சய் சிங் தெரிவித்தாா். இந்த அவதூறு கருத்துகளை ஊடக சந்திப்பின்போதும், ட்விட்டரிலும் அவா்கள் தெரிவித்தனா். அவா்களின் கருத்துகள் பல்கலைக்கழகத்தின் மதிப்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனு தொடா்பான விசாரணைக்கு மே 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராகுமாறு கேஜரிவால், சஞ்சய் சிங் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது கேஜரிவாலும், சஞ்சய் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவா்களுக்கு சம்மன் கிடைத்ததா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை என்று குஜராத் பல்கலைக்கழகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். இதையடுத்து கேஜரிவால், சஞ்சய் சிங் ஆகியோரை ஜூன் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் புதிதாக சம்மன் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com