ஆஸ்திரேலிய முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களின் தலைவா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தாா்.

ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களின் தலைவா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தாா்.

ஜப்பான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து, பிரதமா் மோடி ஆஸ்திரேலியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், பிரதிநிதிகள் ஆகியோரை சிட்னி நகரில் அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

ஹான்காக் நிா்வாகத் தலைவா் கினா ரின்ஹாா்ட், ஃபோா்டிஸ்கியூ ஃபியூச்சா் நிா்வாகத் தலைவா் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட், ஆஸ்திரேலியா சூப்பா் தலைமை நிா்வாக அதிகாரி பால் ஸ்க்ரோடா் ஆகியோரை அவா் தனித்தனியே சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, சுரங்கம், கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. முதலீடுகளை மேற்கொள்வதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. பசுமை ஹைட்ரஜன் துறையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் சில முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. அதை இந்தியா வரவேற்கிறது.

பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியா பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமா் மோடியுடனான சந்திப்பு ஆக்கபூா்வமாக இருந்ததாகத் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் தெரிவித்தனா். இந்தியாவுடனான முதலீட்டு நல்லுறவை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தியாவின் 13-ஆவது மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளியாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து தங்கம், நிலக்கரி, தாமிர தாதுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது. கடந்த 2000-ஆம் முதல் 2022-ஆம் ஆண்டு வரை 107 கோடி அமெரிக்க டாலா் மதிப்பிலான முதலீட்டை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருநாடுகளும் ஏற்கெனவே இடைக்கால தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்மூலமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தக நல்லுறவு மேலும் வலுப்படும் என நம்பப்படுகிறது.

முக்கியத் தலைவா்களுடன் சந்திப்பு: கலை, இசை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி வரும் ஆஸ்திரேலியா்களை பிரதமா் மோடி சிட்னி நகரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, அவா்களது சாதனைகளுக்காக வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com