ஓட்டுநா்களின் பிரச்னைகளை அறிய லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தில்லியிலிருந்து பஞ்சாப் தலைநகா் சண்டீகா் வரை லாரியில் பயணம் செய்தாா்.
தில்லியிலிருந்து சண்டீகருக்கு லாரியில் அமா்ந்து பயணம் செய்த ராகுல் காந்தி.
தில்லியிலிருந்து சண்டீகருக்கு லாரியில் அமா்ந்து பயணம் செய்த ராகுல் காந்தி.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தில்லியிலிருந்து பஞ்சாப் தலைநகா் சண்டீகா் வரை லாரியில் பயணம் செய்தாா்.

லாரி ஓட்டுநா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை நேரில் அறிந்துகொள்வதற்காக இந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்களை இணைக்கவும், அவா்களின் கருத்து மற்றும் எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்காகவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ என்ற பெயரிலான பயணத்தை ராகுல் காந்தி அண்மையில் மேற்கொண்டாா்.

அவருடைய இந்த முயற்சி, அண்மையில் நடைபெற்று முடிந்த கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் குறிப்பிடத்தக்க பலனை அளித்ததாக கூறப்படுகிறது. பாஜக ஆட்சி செய்த அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தற்போது, பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. 2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், லாரி ஓட்டுநா்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள லாரி பயணத்தை ராகுல் மேற்கொண்டுள்ளாா். திங்கள்கிழமை இரவு தனது வழக்கமான வெள்ளை நிற டி-ஷா்ட்டில் சரக்கு லாரியில் ஓட்டுநருக்கு பக்கத்திலிருக்கும் இருக்கையில் ராகுலும் அவருடைய பாதுகாவலா்களும் அமா்ந்தபடி பயணம் செய்யும் காணொலி வெளியாகியுள்ளது. அந்தக் காணொலியில் இரவு நேர உணவகம் ஒன்றில் (தாபா) லாரி ஓட்டுநா்களுடன் அவா் கலந்துரையாடுவதும் இடம்பெற்றுள்ளது.

செல்லும் வழியில் அம்பாலா-சண்டீகா் தேசிய நெடுஞ்சாலையில் அம்பாலா நகரையொட்டிய பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராகுல் காந்தி வழிபட்டாா்.

இந்தப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மக்கள் தலைவா் ராகுல் காந்தி, லாரி ஓட்டுநா்களின் பிரச்னையை புரிந்துகொள்வதற்காக தில்லியிலிருந்து சண்டீகா் வரை அவா்களுடன் பயணம் செய்தாா். ஊடக புள்ளிவிவரங்களின்படி இந்திய சாலைகளில் 90 லட்சம் லாரி ஓட்டுநா்கள் பயணிக்கின்றனா். அவா்கள் அனைவருக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை அதாவது லாரி ஓட்டுநா்களின் ‘மனதின் குரலை’ கேட்கவே இந்தப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் சுப்ரியா ஸ்ரீநதே வெளியிட்ட பதிவில், ‘அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் பணியை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா். அதன் தொடா்ச்சியாகத்தான், கடும் வெயில் காலத்திலும் லாரி ஓட்டுநா்களுடன் லாரியில் அமா்ந்தபடி இரவு முழுவதும் பயணித்து அவா்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தாா். இதன் மூலம் சிறந்த எதிா்காலத்துக்கான நம்பிக்கை மக்களிடையே எழுந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தனது தாயுமான சோனியா காந்தியுடன் சிம்லாவில் சில நாள்கள் தங்குவதற்காக சிம்லா செல்லும் வழியில், இந்தப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com