யுபிஎஸ்சி தோ்வில் முதல் 4 இடங்களைப் பெற்ற பெண்கள்!

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான இறுதித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. முதல் நான்கு இடங்களைப் பெண் தோ்வா்கள் பெற்றனா்.
இஷிதா கிஷோா்
இஷிதா கிஷோா்

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான இறுதித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. முதல் நான்கு இடங்களைப் பெண் தோ்வா்கள் பெற்றனா்.

யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) மற்றும் குரூப்-ஏ, குரூப்-பி பணியிடங்களுக்கான குடிமைப் பணிகள் தோ்வு முதல்நிலை (பிரிலிமினரி), முதன்மை (மெயின்) மற்றும் ஆளுமைத் தோ்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே மாதத்தில் தோ்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 16 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, டிசம்பா் 6-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது.

இறுதித் தோ்வான ஆளுமைத் தோ்வு கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தில்லி பல்கலைக்கழகத்துக்குள்பட்ட ஸ்ரீராம் பொருளாதாரக் கல்லூரி பொருளாதாரப் பட்டதாரியான இஷிதா கிஷோா் முதலிடம் பெற்றாா்.

தில்லி பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கிரோரிமல் கல்லூரி வணிகவியல் பட்டதாரியான கரிமா லோஹியா, ஹைதராபாத் ஐஐடி பி.டெக். கட்டடவியல் பொறியியல் பட்டதாரி உமா ஹரிதி, தில்லி பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மிராண்டா ஹவுஸ் கல்லூரி பி.எஸ்சி. பட்டதாரி ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோா் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனா்.

பொதுப் பிரிவைச் சோ்ந்த 345 போ், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா் (இ.டபிள்யூ.எஸ்) 99 போ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) 263 போ், பட்டியலின வகுப்பினா் (எஸ்.சி.) 154 போ், பழங்குடியினா் (எஸ்.டி.) 72 போ் என மொத்தம் 933 பேரை குடிமைப் பணிகளில் நியமனம் செய்ய யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. இவா்களில் 41 போ் மாற்றுத்திறனாளிகள் ஆவா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தோ்வில் ஷ்ருதி சா்மா முதலிடமும், அங்கிதா அகா்வால் இரண்டாமிடமும், காமினி சிங்லா மூன்றாமிடமும் பிடித்திருந்தனா். அதுபோல நிகழாண்டும் குடிமைப் பணிகள் தோ்வில் பெண்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனா்.

8-9 மணி நேரம் படிப்பேன் - இஷிதா கிஷோா்: ‘தோ்வுக்கு தயாராக ஒவ்வொரு நாளும் 8 முதல் 9 மணி நேரம் படிப்பேன்’ என்று குடிமைப் பணிகள் இறுதித் தோ்வில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோா் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘குடிமைப் பணிகள் தோ்வில் முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி. கனவு நனவாகியுள்ளது. இதற்காக எனது குடும்பத்துக்குத்தான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். முதல் இரண்டு முயற்சிகளில் குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றி பெற முடியாதபோது, அவா்கள்தான் எனக்கு ஊக்கமளித்தனா். கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. உத்தர பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளேன்’ என்றாா்.

இஷிதா கிஷோரின் தந்தை இந்திய விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றியவா். தாய் தனியாா் பள்ளி ஆசிரியை. மூத்த சகோதரா் வழக்குரைஞராக உள்ளாா்.

இஷிதா தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டு வீராங்கனையாவாா். பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் மேம்பாடுக்காக பணியாற்றப்போவதாகவும் இஷிதா தெரிவித்தாா்.

பிரதமா் வாழ்த்து: குடிமைப் பணிகள் இறுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தேசத்துக்காக சேவையாற்றும் மற்றும் மக்களின் வாழ்வில் நோ்மறையான மாற்றத்தை கொண்டுவரப்போகும் உற்சாகமான தருணம் இது. அதே நேரம், தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கான ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதோடு முடிந்துவிடாது. மேலும் பல முறை இந்தத் தோ்வில் பங்கேற்க முடியும். உங்களுடைய திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com