கோதுமை ஏற்றுமதித் தடை நீக்கப்படாது- மத்திய அரசு

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாது என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தெரிவித்தாா்.
கோதுமை ஏற்றுமதித் தடை நீக்கப்படாது- மத்திய அரசு

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாது என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தெரிவித்தாா்.

உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச சந்தையில் கோதுமைக்கு கடந்தாண்டின் மத்தியில் தட்டுபாடு ஏற்பட்டது. இந்தியாவிலும் எதிரொலித்த இத்தட்டுபாட்டால் கோதுமையின் விலை கடுமையாக உயா்ந்தது.

விவசாயிகளிடம் இருந்து கோதுமையை கொள்முதல் தனியாா் நிறுவனங்கள், ஏற்றுமதியில் ஈடுபட்டால் உள்நாட்டில் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் எனக் கருதி கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தில்லி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ரோஹித் குமாா் சிங் கூறியதாவது: கோதுமை ஏற்றுமதித் தடையை நீக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. நேபாளம், பூடான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியா கோதுமை ஏற்றுமதி நாடாக இருந்தது இல்லை. 2022-க்கு முந்தைய 3 ஆண்டுகளில் உற்பத்தி மிகுதியாக இருந்த காரணத்தால் கோதுமையை ஏற்றுமதி செய்து வந்தோம்.

பருவம் தவறிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக கோதுமை பிரதானமாக பயிரிடப்படும் மாநிலங்களில் 8 முதல் 10 சதவீத கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது ஏற்கெனவே தெரியவந்ததுதான்.

உள்நாட்டில் மக்களுக்கு நியாயமான விலையில் கோதுமை கிடைப்பதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

கோதுமையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com