புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்: மத்திய அமைச்சர் அமித் ஷா

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் 1947-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புனித "செங்கோல்',
புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்: மத்திய அமைச்சர் அமித் ஷா

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் 1947-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புனித "செங்கோல்', புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
 இந்தச் செங்கோல் தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் உதவியால் தயாரிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலாகாபாத்) உள்ள நேரு அருங்காட்சியகத்தில் இந்தச் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
 "1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் முன்னிலையில், முதல் பிரதமர் பண்டித நேருவிடம் "செங்கோல்' வழங்கப்பட்டது.
 நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டு மக்களுக்கு இதுகுறித்து அறியவைக்கப்படவில்லை. நாட்டில் அவ்வப்போது நடைபெறும் அதிகாரப் பரிமாற்றம் என்பது வெறும் கைகுலுக்கல் அல்லது ஆவணத்தில் கையொப்பமிடுவது மட்டுமல்ல; அது, உள்ளூர் பாரம்பரிய மரபுகளுடன் இணைந்திருக்க வேண்டும்.
 விடுதலையின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு இந்தச் செங்கோலை தேசிய சின்னமாக புதிய நாடாளுமன்றத்தில் நிறுவ பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். இது வரும் 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும்.
 சோழ பாரம்பரியம்: இந்தச் செங்கோல் தற்போது பிரயாக்ராஜ் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செங்கோல் குறித்து காஞ்சி 68 -ஆவது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (பரமாசாரியர்) 1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சைவ இலக்கிய நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்து பேசியதை அவரது சீடர் தேவார முனைவர் சுப்பிரமணியம் என்பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டார்.
 சோழ பாரம்பரியத்தின் வளையாத செங்கோலைப் பராமரிக்காதது குறித்தும், இதை பாடப் புத்தகத்தில் வைக்காதது குறித்தும் காஞ்சி பீடாதிபதி பரமாசாரியர் குறிப்பிட்டுள்ளார்.
 இது தமிழக ஊடகங்களில் வெளியாக, பிரதமர் மோடி செங்கோலின் சரித்திரத்தில் ஈர்க்கப்பட்டார். இந்தச் செங்கோலை வழங்கிய திருவாவடுதுறை
 ஆதீனம், இதை உருவாக்கிய உம்மிடி பங்காரு எத்திராஜுலு (90), உம்மிடி சுதாகர் செட்டி சகோதரர்கள், நூல் ஆசிரியர் சுப்பிரமணியம் ஆகியோர் கெளரவிக்கப்படுவார்கள்.
 பிரயாக்ராஜில் இருந்து கொண்டு வரப்படும் செங்கோலை கங்கை நீரில் சுத்தப்படுத்தி மங்கள வாத்தியங்களுடன் கோளறு பதிகத்தில் இடம்பெற்றுள்ள "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்ற பாடல் வரிகளுடன் செங்கோலைப் பெற்று புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவுவார்.
 பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஓர் எடுத்துக்காட்டு. இந்த விழாவில் 6,000 தொழிலாளர்களை பிரதமர் கெளரவிப்பார்.
 இந்த கட்டடத் திறப்பு விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பியுள்ளோம் என்றார் அமித் ஷா.
 மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்...
 தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கல் செய்த 2021-2022-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் பண்டித நேருவிடம் புனித செங்கோலை திருவாவடுதுறை இளைய தம்பிரான் வழங்கியது இடம்பெற்றுள்ளது. புனித செங்கோல் குறித்து அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்தபோது, காணொலி திரையில் இந்த விவரம் சுட்டிக் காட்டப்பட்டது.

 மூதறிஞர் ராஜாஜியின் ஆலோசனையுடன்...

 நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய பாரம்பரிய நெறிமுறைகளுடன் அதிகாரப் பரிமாற்ற நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு கேட்க, ஜவாஹர்லால் நேரு, மூதறிஞர் ராஜாஜியுடன் ஆலோசனை நடத்தினார். சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு புனித அடையாளமாக செங்கோல் பரிமாற்றம் செய்த அதே பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க ராஜாஜி ஆலோசனை கூறினார்.
 மேலும், ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு "தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். குருமகாசன்னிதானம் ஆதீனக் கட்டளைத்தம்பிரான் ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் "நாதஸ்வர சக்கரவர்த்தி' திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையும் தில்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
 சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்து திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீன கர்த்தரான குருமகாசன்னிதானத்தைப் பார்த்து, அரசு விழாவில் தான் எந்தத் திருமுறைப்பாடல் பாடுவது எனக் கேட்க, "கோளறு பதிகம் பாடுக' என்று சன்னிதானம் கட்டளையிட்டார்.
 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் முதலில் பெற்றார். செங்கோலுக்குப் புனித நீர் தெளித்து ஓதுவா மூர்த்தி, "வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்று முழுமையாகப் பாடி ஆசிர்வதித்து செங்கோலை ஜவாஹர்லால் நேருவிடம் வழங்கினார்.
 அடையாளச் சின்னம்: திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. தமிழில் "கோள்' என்றால் கிரகம்; "அறு' என்றால் நீக்குவது. "கோளறு' என்றால் கிரகங்களின் தீய விளைவுகளை அழித்தல். "பதிகம்' என்பது பொதுவாக 10 பாடல்களைக் கொண்ட சிவபெருமானை போற்றும் பாடலாகும்.
 பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது. கடவுளின் சக்தி பெறப்படுவதைக் காட்டும்விதமாக 1661-ஆம் ஆண்டு 2 -ஆம் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்காக பிரிட்டன் ராணியின் சாவரின் ஆர்ப் உருவாக்கப்பட்டது. 363 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
 இப்படி பல்வேறு நாடுகளின் ஆட்சி அடையாள சின்னம் குறித்தும், சோழ பேரரசு குறித்த தகவல்களும் மத்திய அரசின் விளக்கக் காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com