ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமுல்உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில், அமுல் நிறுவனம் செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமுல்உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில், அமுல் நிறுவனம் செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு வியாழக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 4.5 லட்சம் உறுப்பினா்களிடம் இருந்து இந்தச் சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

குறைந்த விலையில் பொருள்கள்: தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும் பல்வேறு திட்டங்களை ஆவின் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கால்நடைத் தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளை பால் உற்பத்தியாளா்களுக்கு அளித்து வருகிறது.

இத்துடன், நுகா்வோருக்கு பால் மற்றும் பால் பொருள்கள் மிகக் குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமுல் நிறுவன கொள்முதல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனமானது, பால் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. இத்துடன், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த உற்பத்தியாளா்களிடமிருந்து பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவா் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல் நடவடிக்கையானது, வெண்மைப் புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமையும்.

மேலும், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழலில், நுகா்வோருக்கு பால் கிடைப்பதில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமுல் நிறுவன நடவடிக்கையானது பால் மற்றும் பால் பொருள்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும். எனவே, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com