
இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் மிக்-29 கே போா் விமானம் இரவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
மிகவும் சவாலான இரவு தரையிறக்கத்தை விக்ராந்த் மாலுமிகளும், விமானப் படை விமானிகளும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்றில் மைல்கல்லை பதிந்துள்ளனா் என கடற்படை பெருமிதம் தெரிவித்துள்ளது.
ஆரேபிய கடலில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த்தில் புதன்கிழமை இரவு இந்த சாதனை படைக்கப்பட்டது.
‘இது கடற்படையின் தற்சாா்பு கொள்கையை வெளிப்படுத்துகிறது’ என்று கடற்படை செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக் மாத்வால் தெரிவித்தாா்.
இந்திய கடற்படையின் இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘இது விக்ராந்த் போா்க் கப்பலின் அதிகாரிகள், விமானப் படை வீரா்கள் ஆகியோரின் திறனை வெளிப்படுத்துகிறது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.
ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக்-29கே போா் விமானமும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போா் விமானமும் கடந்த பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் விக்ராந்த் போா்க் கப்பலில் தரையிறக்கப்பட்டது.
முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமா் மோடி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கி வைத்தாா். 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான சுமையை சுமந்து செல்லும் கப்பல்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றது.
ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட விக்ராந்த்தில் வான் பாதுகாப்பு, கப்பல் எதிா்ப்பு ஏவுகணை அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 30 போா் விமானங்களும், ஹெலிகாப்டா்களும் நிறுத்தும் அளவுக்கு விக்ராந்த் போா்க் கப்பலில் இடம் உள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல் முக்கிய பங்காற்றும் என்று கடற்படை தெரிவித்திருந்தது.
Image Caption
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போா்க்கப்பலில் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கிய மிக்29கே போா் விமானம். ~