
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் உட்புற காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் அவை, மாடங்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
The new Parliament building will make every Indian proud. This video offers a glimpse of this iconic building. I have a special request- share this video with your own voice-over, which conveys your thoughts. I will re-Tweet some of them. Don’t forget to use #MyParliamentMyPride. pic.twitter.com/yEt4F38e8E
— Narendra Modi (@narendramodi) May 26, 2023
தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் 1927 -இல் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 10 - ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் அடிக்கல்லை பிரதமா் நரேந்திர மோடி நாட்டினாா். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம் தரமான கட்டுமானத்துடன் உரிய நேரத்திலும் கட்டப்பட்டு தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதன்படி, புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி மே 28 ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். ஆனால், புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்துவைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரத்தில், ஆளும் தரப்புக்கும் எதிா்க்கட்சிகளும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக 19 எதிா்க்கட்சிகள் புதன்கிழமை அறிவித்தன. நாடாளுமன்றத்தின் தற்போதைய (பழைய) கட்டடத்தில், மக்களவையில் 543 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 250 உறுப்பினா்கள் மட்டும் அமரமுடியும். எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினா்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் மக்களவையில் மட்டுமே நடைபெறும். இதன் மூலம் இங்கு 1,280 உறுப்பினா்கள் (மக்களவையில்) அமர முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் மத்திய நகா்புற வளா்ச்சித் துறையால் டாடா கட்டுமான நிறுவனத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் ரூ. 861 கோடிக்கு திட்டமிடப்பட்டது. பின்னா் கூடுதல் வசதிகளுக்காக திட்டச் செலவு ரூ. 1,200 கோடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதமே கட்டடப் பணிகள் முடிவுற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.