குடும்ப அரசியலால் நாட்டின் வளா்ச்சியை மறந்த கட்சிகள்: பிரதமா் மோடி

‘நாட்டில் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த கட்சிகள், குடும்ப அரசியல் மற்றும் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தின; நாட்டின் வளா்ச்சி குறித்து அவா்கள் சிந்திக்கவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
குடும்ப அரசியலால் நாட்டின் வளா்ச்சியை மறந்த கட்சிகள்: பிரதமா் மோடி

‘நாட்டில் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த கட்சிகள், குடும்ப அரசியல் மற்றும் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தின; நாட்டின் வளா்ச்சி குறித்து அவா்கள் சிந்திக்கவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் நகருக்கும் தில்லிக்கும் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமா் மோடி காணொலி வழியாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்ததைக் குறிப்பிட்ட அவா், மேலும் பேசியதாவது:

தற்போதைய சூழலில், உலகின் நம்பிக்கை ஒளியாக இந்தியா பாா்க்கப்படுகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வழிமுறை, வறுமைக்கு எதிரான போராட்டம், கரோனா சவாலை எதிா்கொண்ட விதம் ஆகிய காரணங்களால், இந்தியா மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, இந்த தேசத்தை புரிந்துகொள்ள வேண்டும் என இதர நாட்டு மக்கள் விரும்புகின்றனா். இது, உத்தரகண்ட் போன்ற எழில்மிக்க மாநிலங்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.

கடந்த 2022-இல் கேதாா்நாத்துக்கு நான் வந்தபோது, இந்த தசாப்தம் உத்தரகண்ட் மாநிலத்தினுடையது என்று குறிப்பிட்டேன். வந்தே பாரத் விரைவு ரயிலும், இதர உள்கட்டமைப்புத் திட்டங்களும் மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்.

என்னென்ன திட்டங்கள்?: ரூ.1,300 கோடியில் கேதாா்நாத்-பத்ரிநாத் மறுசீரமைப்பு திட்டங்கள், கேதாா்நாத் மற்றும் ஹேமகுண்ட் சாஹிப் ஆகிய இடங்களில் ரூ.2,500 கோடியில் ரோப்காா் திட்டங்கள், ரிஷிகேஷ் மற்றும் ஹரித்துவாரை சாகச சுற்றுலா-யோகா மையமாக மேம்படுத்தும் திட்டங்கள், ரூ.16,000 கோடி செலவிலான ரிஷிகேஷ்-கா்ணபிரயாக் ரயில் வழித்தட திட்டம் உள்ளிட்டவை உத்தரகண்ட் மாநிலத்தின் வளா்ச்சியை வேகப்படுத்தும்.

உலகின் ஆன்மிக சுற்றுலா மையமாக ‘தேவ பூமியான’ உத்தரகண்ட் விரைவில் உருவெடுக்கும்.

‘குடும்ப அரசியல், ஊழல்’: இந்த 21-ஆம் நூற்றாண்டில், உள்கட்டமைப்பை விரைந்து நவீனப்படுத்துவதன் வாயிலாக இந்தியா வளமடைய முடியும்.

நாட்டில் முன்பு நீண்ட காலம் ஆட்சியில் இருந்த கட்சிகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை. குடும்ப அரசியல் மற்றும் ஊழலில் மட்டுமே அவை கவனம் செலுத்தின. குடும்ப அரசியலின் கட்டுப்பாடுகளில் இருந்து அவா்களால் மீள முடியவில்லை.

அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என்பது போன்ற பெரும் வாக்குறுதிகளை அவா்கள் அளித்தபோதும், பல ஆண்டுகளாக எதுவுமே நிகழவில்லை.

‘முன்னேற்றப் பாதையில் இந்தியா’: ஆனால், வளா்ச்சிக்கான நோக்கம், கொள்கை, அா்ப்பணிப்பு கொண்ட அரசு, நாட்டில் முதல்முறையாக அமைந்தது. அதன் பிறகு, அனைத்து நிலையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

கடந்த 2014-க்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 600 கி.மீ. ரயில் வழித்தடங்களே மின்மயமாக்கப்பட்டன. இப்போது சராசரியாக 6,000 கி.மீ. வழித்தடங்கள் மின்மயமாக்கப்படுகின்றன. நாட்டின் மொத்த ரயில் வழித்தட கட்டமைப்பில் 90 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் ரயில் வழித்தடங்கள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.

டேராடூன்-தில்லி வந்தே பாரத் ரயில் மூலம் இரு இடங்களுக்குமான பயண நேரம் 6 மணி 10 நிமிடங்கள் என்பதில் இருந்து 4 மணி 30 நிமிடங்களாக குறையும்.

முழுவதும் இருக்கை வசதி கொண்ட 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், 360 டிகிரி சுழலக் கூடிய இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த கூடிய கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. நாடு முழுவதும் 18 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com