ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கில்அபிஷேக் பானா்ஜிக்கு ரூ.25 லட்சம் அபராதம்:உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜிக்கு கொல்கத்தா உயா் நீதிமன்றம் விதித்த ரூ.25 லட்சம் அபராதத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்

ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பான வழக்கில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜிக்கு கொல்கத்தா உயா் நீதிமன்றம் விதித்த ரூ.25 லட்சம் அபராதத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற ஆசிரியா் நியமனங்களில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

பள்ளிகளில் ஆசிரியா் பணி வழங்க 130 பேரிடம் தலா ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கப்பட்டதாகவும், மாநில முன்னாள் கல்வி அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி மற்றும் இதர செல்வாக்கு மிக்க நபா்களுக்கு அந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக அபிஷேக் பானா்ஜியிடம் விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து கொல்கத்தா உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை திரும்பப்பெறக் கோரி, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அபிஷேக் பானா்ஜி மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை கடந்த மே 18-ஆம் தேதி தள்ளுபடி செய்த உயா் நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபிஷேக் பானா்ஜிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அபிஷேக் பானா்ஜி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அபிஷேக் பானா்ஜியின் மனுவில் உள்ள கோரிக்கைகளை உயா் நீதிமன்றம் கருத்தில் கருத்தில் கொண்டபோதிலும், ரூ.25 லட்சம் அபராதம் தேவையிருக்கவில்லை. அதற்காக அபராதமே விதிக்க வேண்டியதில்லை என்று அா்த்தமல்ல’ எனக் கூறி, 25 லட்சம் ரூபாய் அபராதத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனா். இதனைத் தொடா்ந்து மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தனா்.

கடந்த மே 20-ஆம் தேதி ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கு தொடா்பாக அபிஷேக் பானா்ஜியிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com