
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் அதே வேளையில், இந்திய ரயில்வேயும், பாதுகாப்பான பயணத்தில் முதலிடத்தில் இருப்பதாக தனது கொண்டாட்டத்தையும் இணைத்துக்கொண்டுள்ளது.
போக்குவரத்துகளிலேயே பலராலும் அதிகம் விரும்பப்படும், மிகவும் பாதுகாப்பான பயணமாக இருப்பது ரயில் போக்குவரத்துதான். பாதுகாப்பான பயணம் என்பது கடந்த காலங்களில் மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, 2006-07 மற்றும் 2013 - 14ம் ஆண்டுகளில் ரயில் விபத்துகள் எண்ணிக்கை 1,243 ஆக இருந்த நிலையில், அதுவே 2014 - 15 மற்றும் 2022 - 23ஆம் ஆண்டுகளில் 638 ஆகக் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்றது முதல், இந்திய ரயில்வேயை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரயில் விபத்துகளை தவிர்க்கவும் பல நடவடிக்கைகளை எடுத்ததாக இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்துகளை தவிர்ப்பதை முக்கியக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்ட ரயில்வே, ஆளில்லா கேட்டுகளை ஒழிக்க கடும் முயற்சி மேற்கொண்டது என்றும் கூறினார்.
இதுவரை 8,948 இடங்களில் இருந்த ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்பட்டுள்ளன. நாட்டில் இருந்த கடைசி ஆளில்லா ரயில்வே கிராசிங் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அகற்றப்பட்டது. இதோடு, 2019 - 2023ஆம் ஆண்டு வரை சுமார் 4 ஆயிரம் ரயில்வே கிராசிங்குகளும் அகற்றப்பட்டுள்ளன.