
புது தில்லி: தலைநகர் புது தில்லியில் சனிக்கிழமை காலை முதல் மழையுடன், சூறாவளிக் காற்றும் வீசியதால் ஒருபக்கம் வெப்பம் குறைந்திருந்தாலும் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து மழைக்காலம் போல மாற்றியிருக்கிறது.
புது தில்லியில் இன்று காலை வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இது வழக்கமான வெப்ப அளவை காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகும்.
சூறாவளிக் காற்றினால் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தாழ்வான பகுதிகளிலும் பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வசந்த் விகார் - தில்லி விமான நிலையம் சாலை பகுதி, கன்ஷிராம் தக்கர் மார்க் உள்ளிட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் மேலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.