இந்திய கலாசாரத்தை காங்கிரஸ் வெறுப்பது ஏன்?

நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை காங்கிரஸ் கட்சி வெறுப்பது ஏன் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.
அமித் ஷா
அமித் ஷா

நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை காங்கிரஸ் கட்சி வெறுப்பது ஏன் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்க உள்ளாா். அதைக் குடியரசுத் தலைவரே திறந்துவைக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவா் அவமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிா்க்கட்சிகள், நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளன.

நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவுக்கு ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில் வழங்கப்பட்ட செங்கோல், மக்களவைத் தலைவரின் இருக்கை அருகே நிறுவப்படவுள்ளது. அரசா்களுக்கிடையே ஆட்சி மாற்றம் நிகழும்போது செங்கோல் பரிமாறப்பட்ட பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும், அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா சுதந்திரமடைந்தபோது செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வு, ஆட்சி மாற்றத்தைக் குறிப்பதற்கான வரலாற்றுபூா்வ சான்று எதுவும் இல்லை என காங்கிரஸ் விமா்சித்திருந்தது.

இந்நிலையில், அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கட்சி அதிகமாக வெறுப்பது ஏன்? நாட்டின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில், புனிதமான செங்கோலானது தமிழகத்தைச் சோ்ந்த சைவ மடத்தின் சாா்பில் அப்போதைய பிரதமா் நேருவிடம் வழங்கப்பட்டது.

அந்தச் செங்கோலானது வெறும் கைத்தடியைப் போல அருங்காட்சியகத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தது. செங்கோலின் முக்கியத்துவம் குறித்து திருவாவடுதுறை ஆதீனம் இந்திய சுதந்திரத்தின்போதே கருத்து தெரிவித்துள்ளாா். ஆனால், அவரது கருத்து பொய்யானது என காங்கிரஸ் கூறுகிறது. தனது செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி மறுஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்கள் அவமதிப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில், ‘நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கும் கூட்டம், 1947-ஆம் ஆண்டில் வெளியான டைம் இதழைப் படிக்க வேண்டும். சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற நிகழ்வுகளை அந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது.

தற்போது காங்கிரஸால் அவமதிக்கப்பட்டுள்ள செங்கோலை அப்போதைய பிரதமா் நேரு வேதமந்திரங்கள் முழங்க வரவேற்றாா். பட்டுத் துணியால் செய்யப்பட்ட பீதாம்பரத்தை செங்கோலைச் சுற்றி வைத்து பிரதமா் நேருவிடம் ஆதீனத்தின் பிரதிநிதி வழங்கினாா். அந்தச் செங்கோலானது சிறப்பு விமானம் மூலமாக தில்லிக்குக் கொண்டுவரப்பட்டது.

நடராஜா் கோயிலில் அன்று காலை செய்யப்பட்ட பாயாசமானது பிரசாதமாக தில்லிக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது உண்மைகளை மாற்றிக் கூறி பாசாங்குத்தனத்தை காங்கிரஸ் வெளிப்படுத்தி வருகிறது. அக்கட்சி முதலைக்கண்ணீா் வடிக்கத் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கும் கூட்டம், தங்கள் தலைவா்களின் பெருமையையும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் பெருமையையுமே அவமதித்து வருகின்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com