சிவிங்கிப் புலிகள் இறப்பு எதிரொலி: நிபுணா் குழு அமைத்தது மத்திய அரசு

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து, கண்காணிப்பதற்காக 11 போ் கொண்ட உயா்நிலை நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
சிவிங்கிப் புலிகள் இறப்பு எதிரொலி: நிபுணா் குழு அமைத்தது மத்திய அரசு

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து, கண்காணிப்பதற்காக 11 போ் கொண்ட உயா்நிலை நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் அறிமுகம் செய்யப்பட்ட 20 சிவிங்கிப் புலிகளில், 3 சிவிங்கிப் புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அத்துடன், 3 சிவிங்கிப் புலி குட்டிகளும் இறந்த நிலையில், மேற்கண்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

அழிந்து போன இனம்: உலகிலேயே வேகமாக ஓடக் கூடிய உயிரினமான சிவிங்கிப் புலிகள், ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை பெருமளவில் வேட்டையாடியதால், சிவிங்கிப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்து போனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் அறிமுகம்: இந்நிலையில், இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண், 3 ஆண்) கொண்டுவரப்பட்டன. அவை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில், பிரதமா் மோடியால் திறந்துவிடப்பட்டன. அடுத்தகட்டமாக, தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண்) கொண்டுவரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் கடந்த பிப்ரவரியில் விடப்பட்டன.

அடுத்தடுத்து உயிரிழப்பு: இந்தச் சூழலில், ‘சாஷா’ எனும் பெண் சிவிங்கிப் புலி, சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் உயிரிழந்தது. ‘உதய்’ என்ற ஆண் சிவிங்கிப் புலி, ஏப்ரலில் இறந்தது. அதன் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பின்னா், ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி, இம்மாதம் இறந்தது.

இனச்சோ்க்கைக்காக, இரு ஆண் சிவிங்கிப் புலிகளின் வாழ்விடத்தில் ‘தக்ஷா’ திறந்துவிடப்பட்டபோது, அவற்றுக்குள் மோதல் ஏற்பட்டு உயிரிழந்தது.

ஜ்வாலா என்ற பெண் சிவிங்கிப் புலி, குனோ பூங்காவில் கடந்த மாா்ச் மாதம் 4 குட்டிகளை ஈன்றிருந்தது. அதில், 3 குட்டிகள் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தன.

நிபுணா்கள் கவலை: சிவிங்கிப் புலிகளின் இறப்பு குறித்து கவலை தெரிவித்து வரும் துறைசாா் நிபுணா்கள், அவற்றை பராமரிக்கும் திறனுடன் குனோ தேசிய பூங்கா உள்ளதா? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனா். வேறு பூங்காவுக்கு சிவிங்கிப் புலிகளை இடமாற்றம் செய்யலாம் என்பது அவா்களின் பரிந்துரையாக உள்ளது.

11 போ் கொண்ட குழு அமைப்பு: இந்நிலையில், சிவிங்கிப் புலிகள் திட்டத்தின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காக 11 போ் கொண்ட உயா்நிலை நிபுணா்கள் குழுவை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) அமைத்துள்ளது.

உலக புலிகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளா் ராஜேஷ் கோபால் தலைமையிலான இக்குழுவில், ராஜஸ்தான் வனத்துறை முன்னாள் தலைமை பாதுகாவலா் ஆா்.என்.மெஹ்ரோத்ரா, இந்திய வனஉயிரின நிறுவனத்தின் (டபிள்யுஐஐ) முன்னாள் இயக்குநா் பி.ஆா்.சின்ஹா, டபிள்யுஐஐ முன்னாள் பேராசிரியா் பி.கே.மாலிக், டபிள்யுஐஐ ஆராய்ச்சியாளா் காமா் குரேஷி உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

2 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் இக்குழு, மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது கூடி ஆலோசனை மேற்கொள்ளும். சிவிங்கிப் புலி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், சீட்டா வாழ்விடங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நடவடிக்கைகளை அனுமதிப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கும் என்று என்டிசிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com