பாலியல் புகாருக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் மல்யுத்த வீராங்கனைகள், தங்களின் பதக்கங்களை கங்கையில் வீச செவ்வாய்க்கிழமை ஹரித்வாா் சென்றனா்.
கங்கை கரையோரத்தில் அவா்களைத் தடுத்து நிறுத்திய ஹரியாணா விவசாய சங்கப் பிரதிநிதிகள், இந்தப் பிரச்னைக்கு ஐந்து நாள்களில் தீா்வு காண்பதாக உறுதியளித்து பதக்கங்களை எடுத்துச் சென்றனா்.
இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக ஜூன் 1-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்சா அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தில்லி போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், தில்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா்.
அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற தில்லி போலீஸாா், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டம் நடத்திய இடத்தில் இருந்து பொருள்களை அப்புறப்படுத்தினா். தில்லியில் வேறு இடத்தில் போராட்டம் நடத்த அவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், உலக அரங்கில் பதக்கம் வென்ற தங்களை குற்றவாளிகளைப் போல் போலீஸாா் கைது செய்ததையும், பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யாமல் இருப்பதையும் கண்டித்து தங்களது சா்வதேச பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வீசப்போவதாக 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் ட்விட்டரில் பதிவிட்டாா்.
‘வாழ்வில் உயிராக மதித்து வந்த பதக்கங்களை புனித கங்கையில் வீசிய பிறகு, வாழ்வதில் அா்த்தம் இல்லை. இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். தவறாக செயல்படுபவா்களுக்கு இந்திய ஆட்சி முறை துணைபோவதால், எனது பதக்கங்கள் புனித கங்கையைவிட எங்கும் பத்திரமாக இருக்காது.
தவறு செய்தவரைப் பிடிக்காமல், அரசு அமைப்பு எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்தி சிறைக்கு அனுப்பத் திட்டமிடுகிறது. நாங்கள் பெற்ற பதக்கங்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்பதால் இதைத் திருப்பி அளிக்கிறோம். எங்கள் பிரச்னையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும், பிரதமா் மோடியும் தலையிட்டு தீா்வு காண விரும்பினோம்’ என்று பதிவிட்டிருந்தாா்.
இதற்கு உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகட், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனா்.
இதையடுத்து, ஹரித்வாா் கங்கை நதிக் கரையில் பதக்கங்களை வீச செவ்வாய்க்கிழமை மாலை கூடிய இவா்களைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கப் பிரதிநிதிகள், இவா்களின் பதக்கங்களை ஒன்றாக சேமித்து எடுத்துச் சென்றனா்.
காங்கிரஸ் விமா்சனம்: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு விவசாய சங்கப் பிரதிநிதிகள் தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.
இதனிடையே, பெண்கள் பாதுகாப்பு குறித்து செங்கோட்டையில் இருந்து பிரதமா் நீண்ட உரையாற்றுகிறாா். ஆனால், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சனம் செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.