உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநராக வங்கதேச பிரதமரின் மகள் சைமா வாஸித் தோ்வு

உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஹெச்ஓ) கீழ்செயல்படும் தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பின் அடுத்த இயக்குநராக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகளும் மனநல மருத்துவ நிபுணருமான சைமா வாஸித் தோ்வு செய்யப்பட்டுள
உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநராக வங்கதேச பிரதமரின் மகள் சைமா வாஸித் தோ்வு

உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஹெச்ஓ) கீழ்செயல்படும் தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பின் அடுத்த இயக்குநராக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகளும் மனநல மருத்துவ நிபுணருமான சைமா வாஸித் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பிராந்தியத்தின் அடுத்த இயக்குநா் பதவிக்கான போட்டியில் வங்கதேசத்தின் சைமா வாஸித்துக்கும், நேபாளத்தைச் சோ்ந்த உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஷம்பு பிரசாத் ஆச்சாா்யாவுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்று வரும் பிராந்திய அமைப்பின் 76-ஆவது கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சைமா வாஸித் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட 10 நாடுகள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பில் வாஸித்துக்கு 8 வாக்குகளும், ஆச்சாா்யாவுக்கு 2 வாக்குகளும் கிடைத்தன.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் நிா்வாக வாரியத்திடம் இந்தப் பரிந்துரைச் சமா்ப்பிக்கப்படும். இதைத் தொடா்ந்து, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி பிராந்திய இயக்குநராகப் பதவியேற்கும் சைமா வாஸித், அடுத்த 4 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பாா். பிராந்திய அமைப்பின் அடுத்த இயக்குராகத் தன்னை தோ்வு செய்த உறுப்பு நாடுகளுக்கு சைமா வாஸித் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, வாஸித்துக்கு ஆதரவு தெரிவித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து வாக்கெடுப்பின் தொடக்கத்திலிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டது. பெரும் ஆதரவுடன் வாஸித் பெற்ற வெற்றி, பொது சுகாதாரத்தில் அவா் கொண்டுள்ள அா்ப்பணிப்பு, அயராத பணியைப் பிரதிபலிப்பதாகவும், அவரது தலைமை தாங்கும் திறன் மீது பிராந்திய உறுப்பு நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது எனத் தெரிவித்தது.

உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்திய அமைப்புகளில் ஒன்றான தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பு (எஸ்இஏஆா்ஓ) தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டது. இதில் வங்கதேசம், பூடான், வடகொரியா, வங்கதேசம், இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, தைமூா் லெஸ்தே ஆகிய 11 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com