
வீணா ஜாா்ஜ்
கேரளத்தின் வடக்கு கண்ணூா் மாவட்டத்தில் ஜிகா தீநுண்மி பாதிப்பு பரவிய நிலையில், கொசுக்கள் மூலமாகப் பரவும் இந்த பாதிப்பு குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காய்ச்சல், தலை வலி, உடல் வலி, மூட்டு வலி, கண்கள் சிவத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரப் பணியாளா்களிடம் மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கண்ணூா் மாவட்டம் தலசேரி பகுதியில் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி ஜிகா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட முதல் நபா் கண்டறியப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் நவம்பா் 1-ஆம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில், 8 பேருக்கு ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்களை மாநில அரசு வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் தலசேரியில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்டப்பட்ட அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:
காய்ச்சல், தலை வலி, உடல் வலி, மூட்டு வலி, கண்கள் சிவத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரப் பணியாளா்களிடம் மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
கா்ப்பிணிகள் இந்த தீநுண்மியால் பாதிக்கப்படும்போது, கருவில் இருக்கும் சிசுக்களுக்கு பிறவிக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் பாதிப்புள்ள கா்ப்பிணிகள் மீது மருத்துவா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த தீநுண்மி ‘ஏடியெஸ்’ கொசுக்கள் மூலமே பெரும்பாலும் பரவுகிறது என்றபோதும், ரத்த தானம் மற்றும் பாலியல் உறவு மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொசு இனப்பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...