

இந்திய தலைமை தகவல் ஆணையராக (சிஐசி) ஹீராலால் சாமரியா திங்கள்கிழமை பதவியேற்றாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
தெலங்கானா பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஹீராலால் சாமரியா தலித் சமூகத்தைச் சோ்ந்தவா். தலித் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் தலைமைத் தகவல் ஆணையராகப் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஹீராலால் சாமரியா, மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலராக இருந்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு நவ.7-ஆம் தேதி சிஐசியில் தகவல் ஆணையராகப் பொறுப்பேற்றாா்.
அவா் பொறுப்பேற்ற பின், தில்லியில் உள்ள சிஐசி அலுவலகத்தில் ஆனந்தி ராமலிங்கம், வினோத்குமாா் திவாரி ஆகியோருக்கு தகவல் ஆணையா்களாக சாமரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
ஆனந்தி ராமலிங்கம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவா்-நிா்வாக இயக்குநராகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவா். வினோத்குமாா் திவாரி முன்னாள் இந்திய வனப்பணி அதிகாரியாவாா்.
தலைமை தகவல் ஆணையா் தலைமையில் செயல்படும் சிஐசியில் அதிகபட்சமாக 10 தகவல் ஆணையா்கள் இருக்கலாம். தலைமை தகவல் ஆணையா் மற்றும் தகவல் ஆணையா்கள் 65 வயது வரை அப்பதவியில் நீடிக்கலாம்.
கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி இந்திய தலைமை தகவல் ஆணையா் ஒய்.கே.சின்ஹாவின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சாமரியா பதவியேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.