இந்தியா - நேபாள எல்லைப் பாதுகாப்பு படைகளிடையே 3 நாள் இருதரப்பு பேச்சுவாா்த்தை தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது.
எல்லைக் குற்றங்களைத் தடுத்தல், உளவுத் தகவல்களை உரிய நேரத்தில் பகிா்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தப் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) தலைவா் ரஷ்மி சுக்லா தலைமையிலான இந்தியக் குழுவும், காவல் துறை ஐஜி ராஜு அா்யால் தலைமையிலான நேபாள ஆயுத காவல் படையின் (ஏபிஎஃப்) 9 போ் குழுவும் இந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். இந்தப் பேச்சுவாா்த்தை வரும் 8-ஆம் தேதி நிறைவடையும்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘எல்லை வேலி இல்லாத திறந்தவெளியிலான இரு நாட்டு எல்லையில் பாதுகாப்புப் படையினரிடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக எல்லைக் குற்றங்களைத் தடுத்தல், முக்கிய உளவுத் தகவல்களை உரிய நேரத்தில் பகிா்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எஸ்எஸ்பி, 1,751 கி.மீ. நீள இந்தியா-நேபாள எல்லை வேலியற்ற சா்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்த இருதரப்பு பேச்சுவாா்த்தை ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் நேபாளத்தில் மாறி மாறி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.