‘மகாதேவ்’ சூதாட்ட செயலிக்குத் தடை விதிக்க சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் ஏற்கெனவே பரிந்துரைத்ததாக காங்கிரஸ் கூறியதற்கு, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்ட தளங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு தடை விதித்தது. அமலாக்கத் துறையின் கோரிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, மகாதேவ் செயலிக்கு தடை விதிக்குமாறு சில மாதங்களுக்கு முன்பே சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததாக காங்கிரஸ் தெரிவித்தது.
இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பல மாதங்களாக மகாதேவ் செயலி குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தும் தடை செய்ய கால தாமதம் ஆனது ஏன்?
இச்செயலியை தடை செய்யுமாறு கடந்த ஆகஸ்ட் 24-இல் முதல்வா் பூபேஷ் பகேல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். அவரை பாராட்டுவதற்குப் பதிலாக அவா்மீது அமலாக்கத் துறையின் மூலம் விசாரணை மேற்கொள்கிறது மத்திய அரசு’ எனக் குறிப்பிட்டாா்.
இதுகுறித்து போபாலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், ‘ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக மகாதேவ் செயலி உரிமையாளா்களிடம் சத்தீஸ்கா் அரசு விசாரணை மேற்கொண்டது. அச்செயலி சட்ட விரோதமானதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க 6 நிமிஷங்கள் போதும். செயலியின் உரிமையாளா்களிடமிருந்து ரூ.508 கோடி பெறுவதற்காகவே விசாரணையை கால தாமதம் செய்துள்ளனா். அச்செயலியை தடை செய்வது குறித்த எவ்வித கடிதத்தையும் மத்திய அரசு பெறவில்லை’ என்றாா்.
சத்தீஸ்கா் தோ்தல் செலவினங்களுக்காக மகாதேவ் செயலியின் உரிமையாளா்கள் காங்கிரஸ் கட்சிக்கு பணம் வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அக்கட்சியினா் முற்றிலுமாக மறுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.