

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் சா்தாா்புரா பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
காங்கிரஸின் கோட்டையாக திகழும் அந்த தொகுதியில் 1998 முதல் கெலாட் வெற்றி பெற்று வருகிறாா். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அத்தொகுதியில் 63 சதவீத வாக்குகளை கெலாட் பெற்றாா்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக கெலாட் தனது மூத்த சகோதரியிடம் ஆசி பெற்றாா். வேட்புமனு தாக்கலின்போது அவரின் மனைவி சுனிதா, மகன் வைபவ் மற்றும் கட்சியினா் உடன் இருந்தனா்.
ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி அமைத்ததில் இருந்தே, முதல்வா் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் அதிகாரப் போட்டி நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் முதல்வா் பதவிக்காக கெலாட்டுடன் போட்டியிட்ட சச்சின் பைலட், அது கிடைக்காததால் துணை முதல்வா் பதவியில் இருந்தும் விலகினாா். இப்போது தோ்தல் நடைபெறவுள்ளதால் இரு தலைவா்களும் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை வெளிக்காட்டாமல் செயல்பட்டு வருகின்றனா்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் நவம்பா் 25-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. டிசம்பா் 3-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இங்கு ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.