உங்களுடைய பான் கார்டு செயல்பாட்டில் உள்ளதா?

உங்களுடைய பான் கார்டு செயல்பாட்டில் உள்ளதா?

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 


புதுதில்லி: நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 

ஆதாருடன் பான் கார்டு எண்ணை 2023 மார்ச் 31 -ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் முடிவடைந்த பின்னர், பான் எண்ணை இணைக்காதவர்கள் ரூ.1000 அபராதத்துடன் இணைக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “புதிய பான் கார்டைப் பெறுவதற்கு சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து ரூ.91 ஆகும். அப்படியென்றால், பான் கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் எப்படி 10 மடங்கு அபராதம் விதிக்க முடியும்? மேலும், பான் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டவர்கள் எப்படி வருமான வரி தாக்கல் செய்வார்கள்? மேலும், அரசாங்கம் இதனை மறுபரிசீலனை செய்து பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால வரம்புகளை குறைந்தது ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க வேண்டும் என்று கவுர் கூறியிருந்தார். 

சந்திர சேகர் கவுர் கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், நாட்டில் பான் கார்டு வைத்திருப்பவர்கள் 70.24 கோடி பேர், அவர்களில் 57.25 கோடி பேர் பான் எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளனர். 12 கோடிக்கும் அதிகமான பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அதில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 

புதிய பான் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தின் போது ஆதார்-பான் இணைப்பு தானாகவே செய்யப்படுகிறது. 2017 ஜூலை 1 அல்லது அதற்கு முன் பான் கார்டு பெற்றவர்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139ஏஏ -இன் துணைப்பிரிவு (2) இன் கீழ், 2017  ஜூலை 1 முதல் பான் கார்டு பெற்ற ஒவ்வொருவரும் "தனது ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டியது" கட்டாயம் என்றும், பான் எண்ணை இணைக்காதவர்கள் ரூ.1000 அபராதத்துடன் இணைக்கலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com