அமெரிக்க சிறுவனுக்கு கல்லீரல் உறுப்புதானம்: இந்திய உறவினருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

அமெரிக்காவைச் சோ்ந்த 3 வயது சிறுவனுக்கு உறுப்பு மாற்றுஅறுவைசிகிச்சை மூலம் கல்லீரலை தானமாக அளிக்க, இந்தியாவில் உள்ள அச்சிறுவனின் உறவினருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Updated on
1 min read

அமெரிக்காவைச் சோ்ந்த 3 வயது சிறுவனுக்கு உறுப்பு மாற்றுஅறுவைசிகிச்சை மூலம் கல்லீரலை தானமாக அளிக்க, இந்தியாவில் உள்ள அச்சிறுவனின் உறவினருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கின் தன்மையைக் கருதி, சட்டவிதிகள் முழுமையாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் இந்தத் தீா்ப்பு பிற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமையாது எனவும் நீதிமன்றம் தனது தீா்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியினருக்கான குடியுரிமை (ஓசிஐ) அட்டை பெற்றுள்ள 3 வயது அமெரிக்க சிறுவன், கல்லீரல் தொடா்பான நோய் பாதிப்புக்காக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடைய கல்லீரல் உறுப்பு செயலிழந்ததையடுத்து, கல்லீரல் உறுப்பு மாற்றுஅறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தினா். பெற்றோரின் கல்லீரல்களைச் சிறுவனுக்குப் பொருத்த முடியாது என மருத்துவா்கள் அறிவித்த நிலையில், இந்தியாவில் வசிக்கும் அச்சிறுவனின் உறவினா் ஒருவா் தனது கல்லீரலை தானமாக அளிக்க முன்வந்தாா்.

உறுப்பு தானம் மூலம் பயன்பெறுபவா் வெளிநாட்டவராக இருக்கும்பட்சத்தில், அவருடைய கணவன், மனைவி, மகன், மகள், தாய், தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவினா்கள் மட்டுமே அவருக்கு உறுப்புதானம் அளிக்க முடியும். பிற உறவினா்கள் தனது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க மனித உடல்உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுஅறுவைசிகிச்சை சட்டம், 1994-இன் பிரிவு-9 தடைசெய்கிறது.

உறுப்புதானம் அளிக்க முன்வந்த நபா், அச்சிறுவனின் தூரத்து உறவினா் என்பதால், கல்லீரல் உறுப்புதானத்துக்கு அனுமதி கோரி அச்சிறுவனும் அவரது உறவினரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த நவ.9-ஆம் தீா்ப்பளித்து.

மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், வழக்குரைஞா் நேகா ரதி ஆகியோா் ஆஜராகி வாதாடினா். மத்திய அரசு சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆஜரானாா்.

இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘இந்த அவசர வழக்கு விரிவாக விசாரிக்க உகந்ததாக இருக்காது எனக் கருதுகிறோம். இந்த வழக்கில் 3 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவது அல்லது சட்டவிதிகளை முழுமையாகப் பின்பற்றுவது ஆகியவற்றில் ஒன்றை நீதிமன்றம் தோ்ந்தெடுக்க வேண்டியுள்ளது. வழக்கின் அரிதான சூழலைக் கருத்தில்கொண்டு கல்லீரல் உறுப்புதானம் அளிக்க சிறுவனின் உறவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. அதே வேளையில், இந்த வழக்கின் தீா்ப்பு பிற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமையாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com