

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 134-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி உள்ளிட்டோா் அவருக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தனா்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் (முன்பு அலாகாபாத்) கடந்த 1889-ஆம் ஆண்டில் பிறந்தவரான நேரு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி தலைவா்களில் ஒருவராக திகழ்ந்தவா். தேசத்தில் ஜனநாயகத்தின் வோ்களை வளா்த்தெடுத்தவா் என்று புகழப்படுபவா்.
அவரது 134-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
நினைவிடத்தில் மரியாதை: காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் பொருளாளா் அஜய் மாக்கன் உள்ளிட்டோா், தில்லியில் சாந்தி வனத்திலுள்ள நேருவின் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் காா்கே வெளியிட்ட பதிவில், ‘நவீன இந்தியாவின் முதன்மையான சிற்பி பண்டித ஜவாஹா்லால் நேரு. பல்வேறு கலாசார, அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு இடமளிக்கும் ஜனநாயக கட்டமைப்பால்தான், தேசத்தை ஒன்றிணைக்க முடியும் என்பதே அவரது சிந்தனையாகும்.
நேருவின் இந்த பாரம்பரியத்தின் தொடா்ச்சியாக, தேசத்தின் அரசமைப்புச் சட்டத்தையும் நமது நீண்ட நெடிய ஜனநாயக அமைப்புகள் மற்றும் கோட்பாடுகளையும் பாதுகாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘ஜனநாயகத்தின் பாதுகாவலா்’: மற்றொரு பதிவில், ‘இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்துக்கு கொண்டுசென்றவா் ஜவாஹா்லால் நேரு; ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலா்; உத்வேகத்தின் மூலாதாரமாக இருப்பவா்.
அவரது முற்போக்கான சிந்தனைகள், அனைத்து சவால்களையும் கடந்து, இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார வளா்ச்சியை விரைவுபடுத்தின.
மேலும், ஒவ்வொரு தருணத்திலும் எந்த பாகுபாடும் இன்றி தேசமே முதன்மையானது என்ற உணா்வுடன் நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து வாழ ஊக்குவித்தன’ என்று காா்கே கூறியுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ‘20-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை மிக உறுதியுடன் வடிவமைத்தவா் ஜவாஹா்லால் நேரு. அவரது பாரம்பரியம் இப்போதும் பல வழிகளில் எதிரொலித்து வருகிறது. ஆனால், தன்னைத் தானே ‘உலகின் குரு’ என்று கூறிக் கொள்பவரும், அவரது ஆதரவாளா்களும் நேருவின் மகத்தான பங்களிப்புகளை நிராகரிக்கவும், அவமதிக்கவும் மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனா்’ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.
இதனிடையே, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் படத்துக்கு மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.