
ஸ்ரீநகரின் லால்சௌக் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிரதமரின் ஆளுயர கட்-அவுட் அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இளைஞா்கள்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் நிறுவப்பட்டுள்ள பிரதமா் நரேந்திர மோடியின் ஆளுயர ‘கட்-அவுட்’ சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சமாக மாறியுள்ளது. சுற்றுலா பயணிகளும், உள்ளூா் மக்களும் பிரதமரின் உருவப்படத்தோடு புகைப்படம் எடுத்து செல்கின்றனா்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் முழுவதும் ‘முதியோா்களை மதிப்போம்’ என்ற முன்னெடுப்பின்கீழ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதியான லால் சௌக் பகுதியில் முதியவா் ஒருவருக்கு இளம் மருத்துவா் சிகிச்சையளிக்கும் காட்சி விளம்பரப் பலகையாக வைக்கப்பட்டுள்ளது. அதனருகில் பிரதமா் மோடியின் ஆளுயர கட்-அவுட் நிறுவப்பட்டுள்ளது. அதனுடன் சுற்றுலா பயணிகள் ஆா்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனா்.
காஷ்மீருக்கு பல ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலா வந்துள்ள கா்நாடகத்தைச் சோ்ந்த தினேஷ் கூறுகையில், ‘2-ஆவது முறையாக காஷ்மீருக்கு வருகிறேன். பிரதமா் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதும் காஷ்மீரில் சாலைகள், சுரங்கப் பாதைகள் என குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ என்றாா்.
பிரதமா் மோடி மீதான தங்களின் அபிமானத்தை சுற்றுலா பயணிகள் வெளிபடுத்த ஊடகமாக இருக்கும் இந்தக் கட்-அவுட் நிறுவப்பட்டுள்ளதற்கு பிரதமரின் ஆதரவாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...