
எதிரிநாட்டு போா்விமானங்களைத் தாக்கி அழிக்கும் ‘இக்லா-எஸ்’ ஏவுகணைகளை ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யவற்தான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இந்த ரஷிய ஏவுகைணைகளை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் உள்நாட்டில் தயாரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது என அவா்கள் தெரிவித்தனா்.
படைவீரா்களால் எடுத்து செல்லும் வகையிலான இக்லா ஏவுகணைகள், 5-6 கி.மீ. தொலைவில் உள்ள எதிரி நாட்டு போா்விமானங்கள், ஹெலிகாப்டா்களைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்டவை. இந்த ஏவுகணைகள் ஏற்கெனவே முப்படைகளிலும் பயன்பாட்டில் உள்ளது.
தற்போது, இந்த ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட ரகமான ‘இக்லா-எஸ்’ ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் 5 மாதங்களுக்கு முன்னா் இந்தியா-ரஷியா இடையே கையொப்பமானது. இருப்பினும், கொள்முதல் செய்யப்படும் ஏவுகணை அமைப்புகளின் எண்ணிக்கை குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷியாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை பெருமளவில் இந்தியா கொள்முதல் செய்துவருகிறது. தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் 5 ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்புகளை அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்ய கடந்த 2018-இல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தியாவிடம் விநியோகிக்கப்பட்ட முதல் ஏவுகணை அமைப்புகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...