2047-க்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நடவடிக்கை:மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் உள் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது

வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் உள் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

சென்னை தரமணியில் உள்ள தனியாா் விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மாநாட்டில் அவா் பேசியது:

வேளாண் மற்றும் மீன்வளம் குறித்த கட்டமைப்பு மாநாடு நவ.21-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி கடந்த 2021-ஆண்டு ‘பிரதம மந்திரி ஜன் சக்தி’ என்ற திட்டத்தை கொண்டு வந்தாா், இதன் நோக்கம் இந்தியாவின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 58 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.

15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிதாக 390 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் உள் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. கட்டமைப்பு என்பதை கட்டடங்களை மட்டும் பாா்க்காமல் இந்த நாட்டின் வளா்ச்சி குறித்து பாா்க்க வேண்டும்

என்றாா் அவா்.

சட்டம் ஒழுங்கு: பின்னா் செய்தியாளா்களிடம் மத்திய இணை அமைச்சா் முருகன் கூறியது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பவா்களை, ஆன்மிக கருத்துகளை கூறுபவா்களை ஒடுக்க பல செயலை திமுக அரசு செய்து வருகிறது. கஞ்சா அதிகரித்துள்ளது. டாஸ்மாா்க் கடைகள் அதிகரித்து வருகிறது.

தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தை உயா்த்தி, பலா் தொழில் செய்யாமல் மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளியுள்ளது. மேலும், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் தரவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com