தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
தெலங்கானாவில் வருகிற நவ. 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இன்று(சனிக்கிழமை) கத்வால் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தெலுங்கானாவில் உள்ள அனைவரும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவித்தார்.
இதையும் படிக்க | நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!
கடந்த 70 ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் தடுத்து வருவதாகவும், தாமதப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டிய அவர், ராமர் கோயிலின் பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளதாகவும், 2024 ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் விழா நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்தார். தற்போதைய சந்திர சேகர் ராவின் ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, மத்திய பிரதேசத்திலும் மக்கள், பாஜகவுக்கு வாக்களித்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை என்று அமித் ஷா கூறியிருந்தார்.
அமித் ஷா இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனை கட்சி, மதத்தை வைத்து விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்வதாக பிரதமர் மோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.